ADDED : ஏப் 02, 2026 05:11 AM
மசாஜ் சென்டரில் 9 பெண்கள் மீட்பு
நீலாங்கரை: நீலாங்கரை, கஜுரா கார்டன் முதல் தெருவில் ஒரு மசாஜ் சென்டர் உள்ளது. இங்கு, சட்டவிரோதமாக பாலியல் தொழில் நடப்பதாக, நீலாங்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று, மசாஜ் சென்டரில் திடீர் ஆய்வு செய்த போலீசார், பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட ஒன்பது பெண்களை மீட்டனர்; மசாஜ் சென்டரின் மேலாளர் தமிழரசி, 28, என்பவரை கைது செய்த போலீசார், உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை தேடுகின்றனர்.
மதுரவாயல், ஆலப்பாக்கம் கோவிந்தப்பா நாயக்கர் தெருவில் பாலியல் தொழில் நடத்திய ராமாபுரத்தைச் சேர்ந்த புகழ் அறிவு, 47, என்பவரை, போலீசார் கைது செய்தனர். அங்கிருந்த இரு பெண்களை மீட்டு, அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
மதுபானம் விற்ற பெண்ணிற்கு 'காப்பு'
வானகரம்: நுாம்பல், திருவீதியம்மன் கோவில் தெருவில் சட்டவிரோதமாக மது விற்ற, அதே பகுதியைச் சேர்ந்த கவிதா, 39, என்பவரை வானகரம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 40 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
'போக்சோ'வில் வாலிபர் கைது
பெரம்பூர்: திரு.வி.க., நகரைச் சேர்ந்த 17 வயது சிறுமி, அழகு கலைஞராக பணிபுரிகிறார். அவருக்கு, சூளைமேடு காமராஜர் நகரைச் சேர்ந்த திருமணமான யோகநாதன், 25, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சிறுமியை, வடபழனியில் உள்ள விடுதியில் இரண்டு நாள் தங்க வைத்து, யோகநாதன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். பெற்றோர் புகாரை விசாரித்த செம்பியம் மகளிர் போலீசார், 'போக்சோ' சட்டத்தின் கீழ் யோகநாதனை நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பஸ் நிலையத்தில் போன் திருடியோர் கைது
கோயம்பேடு: தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 35; ஜவுளி கடைக்காரர். இவர், வியாபாரம் விஷயமாக நேற்று முன்தினம் சென்னைக்கு வந்தவர், சொந்த ஊர் செல்வதற்காக கோயம்பேடு பஸ் நிலையத்தில் காத்திருந்துள்ளார். அப்போது, அவரது மொபைல் போன் திருடு போனது.
கோயம்பேடு போலீசார் விசாரித்து, திருவண்ணாமலையைச் சேர்ந்த ராஜாராம், 21, கோயம்பேடு அரசு, 22, ஆகிய இருவரையும் கைது செய்தனர்; மூன்று மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.
வீட்டின் பூட்டை உடைத்த திருடனுக்கு 'காப்பு'
வண்ணாரப்பேட்டை: வண்ணாரப்பேட்டை, போஜராஜன் நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 42; கட்டடத் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் வீட்டில் துாங்கிக்கொண்டிருந்தார். சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது, அருகே உள்ள வீட்டின் பூட்டை மர்ம நபர் உடைத்து கொண்டிருந்தார். தடுக்க முயன்ற ஆறுமுகத்தை கத்தியை காட்டி மிரட்டி தப்பினார்.
வண்ணாரப்பேட்டை போலீசார் விசாரணையில், திருட்டில் ஈடுபட முயன்றது வியாசர்பாடியைச் சேர்ந்த புருஷோத்தமன், 27, என்பது தெரிய வந்தது. நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர்; அவர் மீது திருட்டு உட்பட, 18 வழக்குகள் உள்ளன.
மனைவியை குத்தி கொல்ல முயன்ற கணவர்
திருவல்லிக்கேணி: அண்ணா சாலை, பார்டர் தோட்டம், எல்.ஜி.என்., சாலையைச் சேர்ந்தவர் பூங்கொடி, 38. இவரது கணவர் ராபர்ட், 38, உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சில ஆண்டுகளாக தனியே வாழ்ந்து வருகிறார்.
கடந்த 30ம் தேதி எல்லீஸ் சாலையில் பூங்கொடி வேலை செய்யும் கடைக்கு வந்த ராபர்ட், கத்தியால் மனைவியின் கழுத்தில் குத்தி தப்பிச் சென்றார். பலத்த காயமடைந்த பூங்கொடியை, அப்பகுதி மக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஓமந்துாரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். திருவல்லிக்கேணி போலீசார், கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, ராபர்ட்டை நேற்று கைது செய்தனர்.
எழும்பூர்: எழும்பூர் ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் விரைவு ரயில், எழும்பூருக்கு வந்தது.
இந்த ரயிலின் பொது பெட்டியில், கேட்பாரற்று கிடந்த பையில் 4 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. இதற்கிடையில்,புவனேஸ்வர் - புதுச்சேரி விரைவு ரயில் நேற்று எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வந்தது. அதில் இறங்கி வந்த பயணியரில் ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரது பையை சோதித்தபோது, 4 கிலோ கஞ்சா இருந்தது.
விசாரணையில், கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த முகமது சாஹிப், 24, எனவும், ரயிலில் கஞ்சா கடத்தியதும் தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட 8 கிலோ கஞ்சாவின் மதிப்பு 4 லட்சம் ரூபாய்.
பெரம்பூர்: செம்பியம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பந்தர் கார்டன், ஆறுமுகம் தெரு பகுதியில், கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை, செம்பியம் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், அண்ணா சாலை பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான சுபாஷ் சந்திரபோஸ், 27, என்பது தெரிய வந்தது. விசாரணைக்கு பின் நேற்று அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
