தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கிரைம் கார்னர்:சென்னை

 கிரைம் கார்னர்:சென்னை

 கிரைம் கார்னர்:சென்னை


ADDED : மே 01, 2026 03:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 01, 2026 03:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்கூட்டரில் இருந்த 2 சவரன் நகை திருட்டு

குன்றத்துார்: குன்றத்துார், சந்தவெளி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கவிதா, 24; நர்ஸ். இவர், தன் 4 வயது மகளை பள்ளியில் சேர்ப்பதற்காக பணம் தேவைப்பட்டதால், குன்றத்துாரில் உள்ள வங்கியில் நகை அடமானம் வைக்க, தன் தந்தை பழனியுடன் ஸ்கூட்டரில், நேற்று முன்தினம் சென்றார். செல்லும் வழியில் துணிக்கடையில் இறங்கியுள்ளனர். அப்போது, ஸ்கூட்டரின் இருக்கையின் கீழ் உள்ள பெட்டியில் வைக்கப்பட்டிருந்த நகை அடங்கிய பையை மர்ம நபர்கள் மூவர் திருடி தப்பினர். குன்றத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

மின் ஊழியர் போல நடித்து மோதிரம் திருட்டு

ஓட்டேரி: பெரம்பூர், அன்பரசன் நகரைச் சேர்ந்தவர் சிவலிங்கம், 67. நேற்று முன்தினம் காலை, அடையாளம் தெரியாத நபர் ஒருவர், இவரது வீட்டுக்குள் நுழைந்து, மின் வாரியத்தில் இருந்து வருவதாகவும், மின் பிரச்னை இருப்பதாக புகார் வந்துள்ளதாகவும் கூறி படுக்கை அறைக்கு சென்றார். சிவலிங்கத்தை வெளியே உள்ள மின் பெட்டியை பார்க்க அனுப்பி வைத்து, வீட்டின் உள்ளே மேஜை மீது வைத்திருந்த அரை சவரன் தங்க மோதிரத்தை திருடி சென்றார். இது குறித்து திரு.வி.க., நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

'லிப்ட்' கண்ணாடியை உடைத்தவர் கைது

பெரியமேடு: நெற்குன்றம், சி.எம்.ஆர்.எல்., அலுவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் விஜயகுமார், 37. இவர், சென்னை மெட்ரோ ரயில் நிலைய கட்டுப்பாட்டாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பணியில் இருந்தபோது 'லிப்ட்' கண்ணாடியை போதை ஆசாமி ஒருவர் அடித்து உடைத்துள்ளார். விஜயகுமார் அவரை பிடித்து, பெரியமேடு போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீசார் அவரை கைது செய்து விசாரித்ததில், மாங்காடைச் சேர்ந்த நீலக்கண்டன், 27 என்பது தெரியவந்தது.

கடையில் புகுந்து திருடிய ஆட்டோ ஓட்டுநர்

அம்பத்துார்: ஆவடி அடுத்த உப்பரபாளையம், பவானி நகரைச் சேர்ந்தவர் எபினேசர், 38. இவர், அம்பத்துார் அடுத்த சூரப்பேட்டையில் ஆர்.ஜி., ஆம்புலன்ஸ் மற்றும் 'ப்ரீசர் பாக்ஸ்' சர்வீஸ் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலை கடைக்குள் நுழைந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், 15,000 ரூபாயை திருடி சென்றார். இது குறித்து புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

மூதாட்டியிடம் செயின் திருடிய பெண்

கொடுங்கையூர்: கொடுங்கையூர், திருவள்ளுவர் நகர் பிரதான சாலையைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி, 38. இவர், உடல் நலம் சரியில்லாத தன் தாய் குழந்தை அம்மாள், 75, என்பவருடன் வசிக்கிறார். கடந்த 23ம் தேதி தேர்தலின்போது, ராஜேஸ்வரி த.வெ.க., பூத் ஏஜன்டாக பணியாற்ற சென்றுள்ளார். அப்போது, வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி குழந்தை அம்மாளை, வழக்கமாக கவனித்துக் கொள்ளும் காளியம்மாள் என்ற பெண்ணிடம் விட்டு சென்றுள்ளார். நேற்று காலை, தாய் குழந்தை அம்மாளை கவனித்த போது, அவர் கழுத்தில் அணிந்திருந்த, 2.5 சவரன் செயின் மாயமாகியிருப்பது தெரியவந்தது. மூதாட்டியிடம் விசாரித்த போது, காளியம்மாள் எடுத்து சென்றதாக கூறியுள்ளார். இது குறித்து, கொடுங்கையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

உ.பி., நபரை தாக்கிய 4 பேர் கைது

நுங்கம்பாக்கம்: உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் பங்கஜ், 24. இவர், நுங்கம்பாக்கம் காமராஜபுரம் முதல் தெருவில் ஆடியோ சர்வீஸ் சென்டரில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 28ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த நான்கு பேர், பங்கஜிடம் மொபைல்போன் கேட்டுள்ளனர். அவர் மறுக்கவே, சரமாரியாக தாக்கி தப்பினர். விசாரித்த நுங்கம்பாக்கம் போலீசார், பங்கஜை தாக்கிய, கார்த்திக், 20, சந்தோஷ், 19, ரோஷன், 20 மற்றும், 16 வயது சிறுவனையும் கைது செய்தனர்.

ஓட்டுநரை தாக்கிய காசாளர் கைது

நுங்கம்பாக்கம்: ஆந்திரா மாநிலம் சித்துாரைச் சேர்ந்தவர் சிவகுமார், 52. நுங்கம்பாக்கத்தில் உள்ள உணவகத்தில் வேன் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். ஒரு மாதத்திற்கு முன் உணவகத்தில் காசாளராக பணிபுரிந்த கோவிந்தையா, 35, என்பவர், இவரிடம் 20,000 ரூபாய் கடன் வாங்கி உள்ளார். ஓரிரு நாட்களில் தருகிறேன் எனக்கூறி சென்றவர், பணத்தை திரும்ப தரவில்லை. நேற்று முன்தினம் காசாளரிடம் பணத்தை கேட்டபோது, ஓட்டுநரை தாக்கியது மட்டுமல்லாமல் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரை அடுத்து, நுங்கம்பாக்கம் போலீசார் நேற்று கோவிந்தையா கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us