ADDED : மே 24, 2026 03:23 AM
ரயில்வே ஊழியரை தாக்கியவர் கைது எழும்பூர்: எழும்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 30; ரயில்வே ஊழியர். கெங்குரெட்டி லெதர் பேக்டரி சாலை வழியாக, கடந்த 19ல் நடந்து சென்றார்.
அவருக்கு தெரிந்த அரவிந்தன் மற்றும் அவரது நண்பர்கள் இருவர் வீண் தகராறு செய்து, அவரை கத்தியால் தாக்கி தப்பினர். ரத்த காயமடைந்த ஊழியர் புகாரையடுத்து, எழும்பூர் போலீசார் விசாரித்து விழுப்புரத்தைச் சேர்ந்த நாராயணன், 40, என்பவரை கைது செய்தனர். வழக்கில் தலைமறைவான மற்றவரை தேடி வருகின்றனர்.
'கவரிங்' கடையில் திருடியவர் கைது பூக்கடை: பூக்கடை பகுதியைச் சேர்ந்தவர் அகமது மஸ்தான், 49. என்.எஸ்.சி., போஸ் சாலை, சுப்புராயன் தெருவில் கவரிங் நகை கடை நடத்தி வருகிறார்.
இவரது 22 வயதுடைய மகள், நேற்று முன்தினம் கடையில் இருந்தபோது, நகை வாங்குவது போல் நடித்து மர்ம நபர் ஒருவர், 8,000 ரூபாய் மதிப்புள்ள நான்கு ஆரம் செட்டு, கொலுசுகளை திருடிச் சென்றுள்ளார்.
இந்த திருட்டு குறித்து 'சிசிடிவி' கேமரா காட்சிகளை பார்த்த அகமது மஸ்தான், அதில் ஈடுபட்ட நபரை, கோவிந்தப்பா நாயக்கன் தெருவில் பிடித்து, பூக்கடை போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீசார் விசாரணை செய்ததில், ராமநாதபுரத்தைச் சேர்ந்த பர்விஸ்கான், 49, என்பது தெரிந்து, அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ஆரம், கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பைக் திருடிய மெக்கானிக் கைது நொளம்பூர்: முகப்பேர், மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன், 66. கடந்த 17ல், நொளம்பூர் மாநகராட்சி பூங்காவில் நடைபயிற்சியில் இருந்தபோது, இவரது இருசக்கர வாகனம் திருடுபோனது.
நொளம்பூர் போலீசார் விசாரித்து, வாகனத்தை திருடிய அம்பத்துார் அடுத்த அயப்பாக்கம், வீட்டு வசதி வாரியம் பகுதியைச் சேர்ந்த மெக்கானிக் புருஷோத்தமன், 46, என்பவரை, கைது செய்தனர்; அவர் திருடிய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
கம்மல் திருடியதாக வாலிபர் மீது தாக்கு
துரைப்பாக்கம்: கல்லுக்குட்டை பகுதியில் ஒரு இறப்பு வீட்டுக்கு, நேற்று முன்தினம், ஈரோட்டை சேர்ந்த உறவினர்கள் வந்தனர். அதில், 3 வயது சிறுமி விளையாடி கொண்டிருந்தபோது, அவர் அணிந்திருந்த கம்மல் மாயமானது.
அங்கு, போதையில் திரிந்த ஜான்சன், 33, என்பவர் திருடினார் எனக்கூறி, அங்கிருந்த மக்கள் அவரை சரமாரியாக தாக்கி, துரைப்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர். அவர், 'நான் கம்மல் திருடவில்லை' என கூறி உள்ளார்.
இந்நிலையில், பொதுமக்கள் அடித்ததில் காயமடைந்த ஜான்சன், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அடித்தவர்கள் மீது ஜான்சன் புகார் அளித்துள்ளார். போலீசார் இரு தரப்பிடமும் விசாரிக்கின்றனர்.
மாமூல் வாங்கிய ரவுடி கைது புளியந்தோப்பு: புளியந்தோப்பு ஆடுதொட்டி அருகே பொது மக்களிடம் கத்தியை காட்டி மாமூல் வாங்கிய கனகராய தோட்டம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்ற 'இட்டா' விஜய், 28, என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். சரித்திர பதிவேடு ரவுடியான இவர் மீது, 29 குற்ற வழக்குகள் உள்ளன.
