ADDED : ஜூன் 05, 2026 04:24 AM
'யூ டியூப்' அலுவலகத்தில் தீ
வடபழனி: வடபழனி, குமரன் காலனி பிரதான சாலையில், ஜெ.பி., டவர் என்ற மூன்று மாடிகள் உடைய வணிக வளாகம் உள்ளது. நேற்று காலை 6:45 மணிக்கு, மூன்றாவது தளத்தில் உள்ள, 'தாஸ் மேன்பவர் கன்சல்டன்சி' நிறுவனத்தில், திடீரென தீ பற்றியது.
அங்கிருந்து பக்கத்தில் இருந்த யூ டியூப் சேனலுக்கும் பரவியது. தீயணைப்பு நிலைய வீரர்கள் ஒன்றரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீயில், யூ டியூப் சேனல் அலுவலகத்தில் இருந்த கேமரா, லென்ஸ், மடிக்கணினி, மினி தியேட்டர் உள்ளிட்ட, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின.
எம் - சாண்ட் கடத்திய லாரி பறிமுதல்
மாதவரம்: சென்னை மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் மற்றும் தனித்துணை வட்டாட்சியர், மாதவரம் ஜி.என்.டி., சாலையில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, 8 யூனிட் எம் - சாண்ட் மணல் ஏற்றி வந்த லாரியை நிறுத்தினர். உரிய அனுமதியின்றி மண் ஏற்றி வந்த லாரியை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
8 சவரன் திருடிய 2 பேர் கைது
நந்தம்பாக்கம்: மணப்பாக்கம், காமராஜர் சாலை பகுதியில் வாடகை வீட்டில் வசிக்கும் நீலகண்டராவ், இம்மாதம் 1ம் தேதி குடும்பத்துடன் வெளியூர் சென்றார்.
இவரது வீட்டு பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு, 8 சவரன் தங்க நகைகள், 395 கிராம் வெள்ளி பொருட்கள், 12,000 ரூபாய் ஆகியவை திருடுபோனது.
நந்தம்பாக்கம் போலீசார் விசாரித்து, இச்செயலில் ஈடுபட்ட கொடுங்கையூரைச் சேர்ந்த கலீமுல்லா, 21, பெரம்பூர் முகமது யுசுப், 22, ஆகியோரை, நேற்று கைது செய்தனர். தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஏ.டி.எம்., மிஷின் உடைப்பு
கீழ்ப்பாக்கம்: கீழ்ப்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே, 'சிட்டி யூனியன்' வங்கியின் ஏ.டி.எம்., மையம் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு, கம்பி மற்றும் கல்லால் மிஷினை உடைக்க, மர்ம நபர் முயன்றார். அப்போது, பாதுகாப்பு அலாரம் ஒலிக்கவே, அங்கிருந்து தப்பியோடினார். போலீசார், அந்நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
பழைய கார் விற்கும் நபர் கடத்தல்
திருப்போரூர்: துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்தவர் கோமதிசங்கர், 47; பழைய கார்களை வாங்கி விற்பவர்.
மகள் கார்த்திகை பிரியா, மருமகன் சண் முகராஜன் ஆகியோருடன், திருப்போரூர் அடுத்த இள்ளலுார் 'வொண்டர்லா' கேளிக்கை பூங்காவில் இருந்து, நேற்று முன்தினம் இரவு காரில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
இவர்களை பின்தொடர்ந்து வந்த நான்கு பேர் கும்பல், கோமதிசங்கரின் காரை மடக்கியது. பின், அவரை வெளியே இழுத்து, சரமாரியாக தாக்கி காரில் கடத்தியது.
பழைய கார்களை வாங்கி விற்பதில் ஏற்பட்ட முன்விரோதமாக இருக்கலாம் என, தெரிவித்த போலீசார், கடத்தல் கும்பலை பிடிக்க நான்கு தனிப்படை அமைத்துள்ளனர்.
