ADDED : ஜூன் 13, 2026 02:27 AM

துணிக்கடையில் ஊழியர் இறப்பு
தி.நகர்: கோவையைச் சேர்ந்த செல்வம், 56, தி.நகர், உஸ்மான் சாலையில் உள்ள பிரபல துணிக்கடையின் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று முன்தினம், பணி முடிந்ததும் இயற்கை உபாதை கழிக்க கடையில் உள்ள கழிப்பறைக்கு சென்றார். அங்கு மயங்கிய நிலையில் செல்வம் கிடந்தார். '108' ஆம்புலன்ஸ் சேவை மருத்துவ உதவியாளர்கள் பரிசோதித்ததில், செல்வம் ஏற்கனவே இறந்தது தெரிந்தது. பாண்டிபஜார் போலீசார், சடலத்தை மீட்டனர்.
ஏரி நீரில் மூழ்கி ஒருவர் பலி
மணிமங்கலம்: படப்பை கரசங்கால் பகுதியை சேர்ந்த வசந்த்ராஜ், 42, என்பவர், மணிமங்கலம் ஏரியில் நேற்று சடலமாக மீட்கப்பட்டார். கூலி தொழிலாளியான இவர், மது அருந்தி ஏரியில் குளிக்கும்போது மூழ்கி இறந்தாரா அல்லது வேறு காரணமா என, மணிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
விபத்தில் போலீஸ்காரர் காயம்
சோமங்கலம்: தாம்பரம் அருகே, சேலையூரைச் சேர்ந்தவர் சதீஷ், 40. சோமங்கலம் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை போலீஸ்காரர்.
நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து, வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், சோமங்கலம் அருகே தன் 'ஹீரோ பேஷன் ப்ரோ' பைக்கில் சென்று கொண்டிருந்தார். வரதராஜபுரம் சுங்கச்சாவடியை கடந்த போது, நிலைத்தடுமாறி விழுந்து, பலத்த காயமடைந்தார். தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மூதாட்டியை சீண்டியவர் கைது
அயனாவரம்: அயனாவரம் பகுதியைச் சேர்ந்த 63 வயது மூதாட்டி, புழுக்கம் காரணமாக, வீட்டு கதவை திறந்து வைத்து, தன் கணவருடன் துாங்கி கொண்டிருந்தார்.
அதே பகுதியில், வாடகைக்கு தங்கியுள்ள உ.பி., மாநிலத்தைச் சேர்ந்த யோகேஷ், 33, என்பவர், நேற்று அதிகாலை வீட்டிற்குள் புகுந்து, மூதாட்டியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அவர்கள் சத்தமிடவே, அங்கிருந்து யோகேஷ் தப்பினார்.
அயனாவரம் போலீசார், யோகேஷை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.
ஆபாச வீடியோ எடுத்தவர் சிக்கினார்
திருவல்லிக்கேணி: திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில், ஒரு கடையில் பானிபூரி சாப்பிட்டு கொண்டிருந்த சில பெண்களை, மொபைல் போனில் ஆபாசமாக ஒருவர் வீடியோ எடுத்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த ஜாம்பஜார் போலீசார், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பசுபதி, 44, என்பவரை நேற்று கைது செய்தனர்.
மாடியில் இருந்து விழுந்தவர் பலி
சூளைமேடு: வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கவுதம், 25; தனியார் நிதி நிறுவன ஊழியர். நேற்று முன்தினம், அரும்பாக்கம், வெள்ளாளர் தெருவில் உள்ள நண்பருடன், வீட்டின் மாடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது தடுமாறி மாடியில் இருந்து பக்கத்துவீட்டு மாடியில் விழுந்ததில், தலையில் பலத்த காயமடைந்தார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று மதியம் உயிரிழந்தார்.
