ADDED : ஜூன் 13, 2026 02:39 AM

குடும்ப தகராறில் மகளை கடத்திய தாய்
ஆதம்பாக்கம்: வேளச்சேரி, இ.பி.காலனியைச் சேர்ந்தவர் சாந்தி, 55. தன் 4 வயது பேத்தியுடன் சாய்பாபா கோவிலுக்கு சென்றார். அப்போது ஒரு பெண் உள்ளிட்ட நால்வர், பேத்தியை பறித்து காரில் கடத்திச் சென்றனர். விசாரணையில், குழந்தையின் தாய் சந்தியா, 23, திருநங்கையர் உதவியுடன் மகளை கடத்திச் சென்றது தெரிந்தது. குழந்தையை மீட்டுத் தரக் கோரி பாட்டி சாந்தி புகாரின்படி, ஆதம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாடிக்கையாளரை தாக்கிய ஊழியர் கைது
ஆவடி: ஆவடி அடுத்த அயப்பாக்கத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சந்திரதீப், 32, 'செப்டோ' செயலியில் மளிகை பொருட்கள் ஆர்டர் செய்தார். டெலிவரி செய்த கணேஷ், 19, உடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆத்திரமடைந்த டெலிவரி ஊழியர், நண்பர் திவாகர், 18, உடன் சென்று சந்திரதீப்பை தாக்கினார். காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். புகாரின் பேரில், கணேஷ், திவாகர் கைது செய்யப்பட்டனர்.
30 கிலோ கஞ்சா பறிமுதல்
சிந்தாதிரிப்பேட்டை: சிந்தாதிரிப்பேட்டை, மே தின பூங்கா அருகே கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்தவரின் உடைமைகளை சோதனை செய்தபோது, 30 கிலோ கஞ்சா இருந்தது. மேற்கு திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் தாஸ், 23, என்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 30 கிலோ கஞ்சா மற்றும் மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.
சிறுமியுடன் பழகிய வாலிபருக்கு 'போக்சோ'
ஆவடி: ஆவடி காவல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி. கோடை விடுமுறையில் 'ப்ரீ பயர்' ஆன்லைன் விளையாட்டு மூலம் புதுக்கோட்டையைச் சேர்ந்த தினேஷ், 26, என்பவருடன் பழகியுள்ளார். இந்நிலையில், பள்ளி சென்ற சிறுமி வீடு திரும்பாததால் பெற்றோர் புகார் அளித்தனர். விசாரணையில், தினேஷ் அழைத்ததால் சிறுமி புதுக்கோட்டை சென்றது தெரிந்தது. இருவரையும் கண்டுபிடித்த போலீசார், தினேஷை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
'ரேபிடோ' ஓட்டுநருக்கு வலை
கொடுங்கையூர்: மேகாலயாவைச் சேர்ந்தவர் ஹெஸ்லி ஜேன் நாங்பிர்சா, 25. நேற்று, மயிலாப்பூரில் இருந்து கொடுங்கையூருக்கு திரும்ப ரேபிடோ செயலி மூலம் இருசக்கர வாகனம் முன்பதிவு செய்தார். பயணத்தின்போது ஓட்டுநர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
எதிர்ப்பு தெரிவித்த ஹெஸ்லி ஜேனை தாக்கிய ரேபிடோ ஓட்டுநர், கொருக்குப்பேட்டை பாரதி நகர் மேம்பாலம் அருகே இறக்கிவிட்டு தப்பிச் சென்றார். கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிந்து ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
உணவக ஊழியரிடம் வழிப்பறி; மூவர் கைது
வேளச்சேரி: துாத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்தவர் அருண் செல்வம், 19. சென்னையில் உள்ள உணவகத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, வேளச்சேரி - தரமணி சாலை ஓரமாக துாங்கிக் கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த மூவர் அவரை மிரட்டி 2,000 ரூபாயை பறித்துச் சென்றனர்.
விசாரணையில், ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த விபின்சன், 24, பிரதீப் குமார், 22, தர்மலிங்கம், 26, ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், பணத்தை மீட்டு சிறையில் அடைத்தனர்.
