ADDED : ஜூன் 21, 2026 12:21 AM

பயணியரிடம் ஆபாச சைகை போதை நடத்துநர் கைது
சென்னை: காசிமேடைச் சேர்ந்தவர் தினேஷ்பாபு, 46. இவர், நேற்று முன்தினம் இரவு ராயபுரம் மார்க்கெட் பேருந்து நிறுத்தத்தில் இருந்து மகளுடன் மாநகர பேருந்தில் ஏறினார். விநாயகபுரத்திற்கு டிக்கெட் எடுப்பதற்காக, 40 ரூபாயை நடத்துநரிடம் கொடுத்துள்ளார். அவர், 20 ரூபாயை எடுத்துக் கொண்டு, 20 ரூபாயை துாக்கி ஏறிந்தார். மேலும், அவரது மகளை பார்த்து ஆபாச சைகை செய்து தகராறில் ஈடுபட்டுள்ளார். சக பயணியர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். ராயபுரம் போலீசாரின் விசாரணையில், நடத்துநர் கார்த்திக், 29 மதுபோதையில் இருந்ததும், எண்ணுாரைச் சேர்ந்த அவர் தற்காலிக பணியாளர் என்பதும் தெரியவந்தது. போலீசார் அவரை நேற்று கைது செய்தனர்.
பயணியை தாக்கி கீழே தள்ளிய நடத்துநருக்கு வலை
அரும்பாக்கம்: ஆயிரம்விளக்கு பகுதியைச் சேர்ந்தவர் முகமது, 38. இவர், நேற்று முன்தினம் இரவு, ரெட்டேரியில் இருந்து கிண்டி சென்ற மாநகர பேருந்தில் பயணித்தார். எம்.எம்.டி.ஏ., காலனி நிறுத்தத்தில் இறங்க பஸ்சை நிறுத்துமாறு முகமது கூறியபோது, மொபைல்போனை பார்த்துக் கொண்டிருந்த நடத்துநர் உசேன் அதை கவனிக்காததால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அரும்பாக்கம் மெட்ரோ நிலையம் அருகே பேருந்து நின்றபோது, நடத்துநர் தாக்கியதில் பேருந்தில் இருந்து கீழே விழுந்து முகமது காயமடைந்தார். கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் அளித்த புகாரின்பபடி, நடத்துநர் உசேனை போலீசார் தேடி வருகின்றனர்.
மகன் இறந்த துக்கம் தாளாமல் தாய் துாக்கிட்டு தற்கொலை
திருநீர்மலை: திருநீர்மலை, தெற்கு மாடவீதியைச் சேர்ந்தவர் காயத்ரி, 49; பூ வியாபாரி. கணவர் இறந்த நிலையில், ஒரே மகனான பாலாஜியுடன் வசித்து வந்தார். இரு தினங்களுக்கு முன், பாலாஜி ரயிலில் அடிபட்டு இறந்ததாக கூறப்படுகிறது. மகன் இறந்த துக்கம் தாளாமல் இருந்த காயத்ரி, நேற்று முன்தினம் இரவு அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சங்கர் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாலிபரிடம் ரூ.14,000 பறிப்பு திருநங்கையர் மூவருக்கு வலை
பல்லாவரம்: மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் மெருலால் யாதவ், 42. இவர், நேற்று முன்தினம் மாலை, பல்லாவரம் - திருநீர்மலை சாலையில் உள்ள 'டாஸ்மாக்' கடையில் மது அருந்தி வெளியே வந்துள்ளார். அப்போது, அங்கு வந்த திருநங்கையர் மூவர், மெருலால் யாதவிடம் யாசகம் கேட்டதாக கூறப்படுகிறது. பையில் இருந்து 10 ரூபாய் எடுத்த போது, மூனறு திருநங்கையரும் சேர்ந்து, அவரிடம் இருந்து 14,000 பறித்து தப்பினர். பல்லாவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கவர்னர் மாளிகை முற்றுகையிட முயன்ற சங்கத்தினர் கைது
கிண்டி: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மாணவர்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கத்தினர், நேற்று, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்றனர். சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகில், போலீசார் தடுத்து நிறுத்தினர். உடனே, அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களை கைது செய்ய கிண்டி போலீசார் முயன்றபோது, போலீசாருக்கும், மாணவர் சங்கத்தினருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. நீண்ட போராட்டத்திற்குபின், 17 பெண்கள் உட்பட 61 பேரை, கைது செய்து பேருந்தில் ஏற்றி, சைதாப்பேட்டையில் உள்ள ஒரு மண்டபத்தில் அடைத்தனர். இதனால், சின்னமலை, சைதாப்பேட்டையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புதுக்கோட்டை வாலிபர் கோர்ட்டூர்புரத்தில் தற்கொலை
கோட்டூர்புரம்: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பூபாலன், 25. இவர் கோட்டூர்புரம் பகுதியில் தங்கி, வேளச்சேரியில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்தார். அவருடன், காதலி சுபாவின் தங்கை வளர்மதி வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடித்து, வளர்மதி வீட்டிற்கு திரும்பிய போது, பூபாலன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது. கோட்டூர்புரம் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
கத்தியை காட்டி அலப்பறை ரவுடி உட்பட இருவர் கைது
ராயபுரம்: காசிமேடில் நேற்று காலை காசிமேடு போலீசார் ரோந்து சென்றபோது, இந்திரா நகரில் இரு வாலிபர்கள் கத்தியுடன் அலப்பறையில் ஈடுபட்டனர். போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர். போலீசார் அவர்களை மடக்கி விசாரித்ததில், சிங்காரவேலர் நகரைச் சேர்ந்த முகேஷ், 19, அஜித்குமார், 22, என, தெரியவந்தது. இதில் முகேஷ் மீது கொலை, கொலை முயற்சி உட்பட 10 வழக்குகளும், அஜித் குமார் மீது 'போக்சோʼ உட்பட இரண்டு வழக்குகளும் இருப்பதும் தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
