ADDED : ஜூலை 05, 2026 02:46 AM
13 கிலோ கஞ்சாவுடன் சிறுவன் கைது
திருவல்லிக்கேணி: அண்ணா சாலை, ஜிம்கானா கிளப் அருகே, ஆட்டோவில் 13 கிலோ கஞ்சா கடத்திய 16 வயது சிறுவனை, திருவல்லிக்கேணி போலீசார் நேற்று கைது செய்தனர். திரிபுராவில் இருந்து மேற்கு வங்கம் வழியாக ஹவுரா ரயிலில் சென்னை வந்து, வடபழனி நோக்கி சென்றபோது சிக்கினார்.
சிறுமியை சீண்டியவர் கைது
சிட்லப்பாக்கம்: கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்தவர் முகமது யூசுப், 56. இவருக்கு சொந்தமான பிரியாணி உணவு சமைக்கப்படும் கிடங்கில் பணிபுரிந்தவரின் 12 வயது மகளுக்கு, பாலியல் தொந்தரவு தந்துள்ளார். சிட்லப்பாக்கம் மகளிர் போலீசார், முகமது யூசுப்பை 'போக்சோ'வில் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
குட்கா, மது பாட்டில்கள் பறிமுதல்
டி.பி.சத்திரம்: டி.பி.சத்திரம், 18வது தெருவில், 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டரை நிறுத்திய போலீசார், அதில் இருந்த, 24 கிலோ குட்கா போதை பொருள் மற்றும் 26 குவார்ட்டர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். அயனாவரத்தைச் சேர்ந்த பார்த்திபன், 49, என்பவரை கைது செய்து, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
'ஏசி' செப்பு வடம் திருடியவர் கைது
தாம்பரம்: மேற்கு தாம்பரம், துரைசாமி ரெட்டி தெருவில், 'ரிலையன்ஸ் ஜியோ மார்ட்' நிறுவனம் இயங்கி வருகிறது. இங்குள்ள மூன்று 'ஏசி' பெட்டியின் செப்பு வடத்தை, கடந்த 30ம் தேதி திருடிய வழக்கில், ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த பிரசாந்த், 20, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
'காமுக' நபர் தற்கொலை முயற்சி
குன்றத்துார்: குன்றத்துார் அருகே திருமுடிவாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 15 வயது சிறுமிக்கு, அதே பகுதியில் உள்ள மளிகை கடைக்காரர் கார்த்திகேயன், 41, பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
திருமுடிவாக்கம் போலீசார், சிறுமியின் வீட்டில் விசாரித்ததை அறிந்த கார்த்திகேயன், நேற்று முன்தினம் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். தாம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
பெண்ணிடம் போன் பறித்த இருவர் கைது
பள்ளிக்கரணை: வேளச்சேரி அடுத்த பள்ளிக்கரணையைச் சேர்ந்தவர் ரகீமா, 40; தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் துாய்மை பணியாளர். கடந்த 1-ம் தேதி, பூர்வங்கரா சாலையில் நடந்து சென்றபோது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர், ரகீமாவின் மொபைல் போனை பறித்தனர்.
பள்ளிக்கரணை போலீசார் விசாரித்து கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த சூர்யா, 28, சுதாகர், 30, ஆகியோரை நேற்று கைது செய்து, மொபைல் போன் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.
வாலிபரை தாக்கிய 5 சிறுவர்கள் சிக்கினர்
ஓட்டேரி: ஓட்டேரியைச் சேர்ந்தவர் கணேசன், 34; பெயின்டர். நேற்று முன்தினம் இரவு, பணி முடிந்து நடந்து சென்ற அவரை, ஐந்து பேர் கும்பல் சரமாரியாக தாக்கியது. ஓட்டேரி போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த 17 மற்றும் 16 வயது சிறுவர்கள் ஐந்து பேரை நேற்று கைது செய்து, சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பினர்.
