ADDED : ஜூலை 31, 2026 03:51 AM

குண்டு வீசிய இருவர் கோர்ட்டில் சரண் படப்பை: படப்பை அருகே காவனுார் கிராமத்தில் சுஜித், 23, என்பவர் வீட்டின் முன்பும், முத்துமாரியம்மன் கோவில் அருகேயும், ஒரே பைக்கில் வந்த இருவர், கடந்த 28ல் இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை வீசி வெடிக்க வைத்தனர். இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. படப்பை போலீசார் விசாரணையில், காவனுாரில் நடந்த இறுதிச்சடங்கின்போது, சுஜித் மற்றும் ஸ்ரீநாத், 22, இடையே தகராறு ஏற்பட்டு தாக்கிக்கொண்டது தெரியவந்தது. இதனால், சுஜித்தை அச்சுறுத்த ஸ்ரீநாத், அவரது நண்பர் தீபக், 22, ஆகியோர் நாட்டு வெடிகுண்டுகளை வீசி தலைமறைவாகினர்.
இந்நிலையில் ஸ்ரீநாத், தீபக் ஆகிய இருவரும், ஸ்ரீபெரும்புதுார் நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தனர். இதையடுத்து இருவரும், சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆட்டோவை நொறுக்கி வாலிபர்கள் ரகளை வியாசர்பாடி: வியாசர்பாடி, பொன்னப்பன் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்களின் கண்ணாடியை, மது போதையில் இருந்த 16 வயது வாலிபர்கள், நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு, கல்லால் அடித்து நொறுக்கினர். வியாசர்பாடி போலீசார், 16 வயது வாலிபர்கள் நான்கு பேரை பிடித்து, சிறார் சீர்த்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி சிட்லப்பாக்கம்: பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீராம்குமார், 24, தாம்பரம் அருகே சிட்லப்பாக்கத்தில் ஒரு வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, கீழே கிடந்த மின் ஒயரை கவனிக்காமல் மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தார்.
தாம்பரம் மாவட்ட அரசு மருத்துவமனையில், மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், ஸ்ரீராம்குமார் ஏற்கனவே இறந்தது தெரிந்தது. சிட்லப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தொழிலாளியின் கை துண்டானது தாம்பரம்: ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் தர்மாவரம், 21. நேற்று காலை 10:00 மணிக்கு, பம்மல், காமராஜபுரத்தில் உள்ள கிரஷரில், கல் அரைக்கும் இயந்திரத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, இயந்திரத்தில் அவரது வலது கை சிக்கி துண் டானது. மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். விபத்து குறித்து சங்கர் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
ரூ.60 லட்சம் நில மோசடியில் ஒருவர் கைது ஆவடி: வேளச்சேரியைச் சேர்ந்தவர் ஏழுமலை, 71, திருவள்ளூர் மாவட்டம், நேமம் கிராமத்தில் 3,975 சதுர அடி நிலத்தை, 2010ல் வாங்கினார். இவருக்கு நிலத்தை விற்ற ஜானகிராமன், போலி ஆவணம் தயாரித்து, தன் மனைவி செல்வமணி பெயரில் தான பத்திரம் கொடுத்து, ஏழுமலையை ஏமாற்றியுள்ளனர். அந்த நிலத்தின் மதிப்பு 60 லட்சம் ரூபாய். ஏழுமலை புகாரை விசாரித்த ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார், தலைமறைவாக இருந்த ஜானகிராமனை நேற்று கைது செய்தனர்.
ரூ.60 லட்சம் குட்கா பறிமுதல்: இருவர் கைது கொரட்டூர்: கொரட்டூர் எம்.ஜி.ஆர்., மன்றம் அருகே, பைக்கில் வந்த வெங்கடபுரத்தைச் சேர்ந்த யுவகணேஷ், 36, என்பவரிடம், 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர். யுவகணேஷ் மற்றும் உடந்தையாக இருந்த பாலா, 52, ஆகியோரை கைது செய்தனர்.
