ADDED : செப் 17, 2026 01:27 AM

11 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்தவர் கைது
பல்லாவரம்: பல்லாவரத்தைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, நேற்று முன்தினம் மாலை, அருகேயுள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றபோது, மர்மநபர் சிறுமியை கட்டி பிடித்து, சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அக்கம்பக்கத்தினர் மர்மநபரை பிடித்து, பல்லாவரம் மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், ஜமீன் பல்லாவரம், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த யுவசங்கர், 34, என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.
மனைவி பணம் தராததால் கணவர் தற்கொலை
ஓட்டேரி: ஓட்டேரி, காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் மணிவண்ணன், 35; துாய்மை பணியாளர். இவரது மனைவி மாலா, 30. மதுவுக்கு அடிமையான இவர், நேற்று முன்தினம் இரவு மனைவியிடம் குடிக்க பணம் கேட்டுள்ளார். மாலா மறுக்கவே, மணிவண்ணன் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின், மாலாவும், அவரது தாயும் அருகே உள்ள உறவினர் வீட்டில் துாங்கினர். நேற்று காலை வந்து பார்த்தபோது, மணிவண்ணன் துாக்கிட்டு இறந்து கிடந்துள்ளார். தகவலறிந்து வந்த ஓட்டேரி போலீசார், உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.
தலைமை செயலக ஊழியர் அடிதடி வழக்கில் கைது
ஆலந்துார்: பரங்கிமலை, பஜார் சாலையில் உள்ள ஹோட்டலுக்கு, நேற்று முன்தினம் நள்ளிரவு இருவர் மதுபோதையில் சாப்பிட சென்றனர். அப்போது, ஹோட்டல் ஊழியர்கள் சாப்பிட எதுவும் இல்லை எனக் கூறியுள்ளனர். ஆத்திரமடைந்த இருவரும், ஹோட்டல் ஊழியரான ஒடிஷாவைச் சேர்ந்த ஜஸ்மீர், 34, என்பவரை தாக்கினர். பொருட்களையும் சேதப்படுத்தினர். தகவலறிந்து வந்த போலீசார், ஆலந்துாரைச் சேர்ந்த தலைமை செயலக சுகாதார துறை ஊழியர் கிருஷ்ணன், 27, அவரது நண்பர் கோகுல கிருஷ்ணன், 27, ஆகியோரை கைது செய்தனர்.
மனைவி தற்கொலை: கணவர் கைது
புழல்: புழல், ஒற்றவாடை தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக், 32. இவரது மனைவி பவானி, 29. தம்பதி இடையே நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறு காரணமாக, பவானி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமணமாகி மூன்று ஆண்டுகளே ஆவதால், கோட்டாட்சியர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. பவானியின் தற்கொலைக்கு கார்த்திக் காரணம் என்பது தெரியவந்ததால், புழல் போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.
வாலிபர்கள் மீது 'ஆசிட்' ஊற்றியவர் கைது
அம்பத்துார்: அம்பத்துார் வெங்கடாபுரத்தில், அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் பாலமுருகன், 25, அஜய் எட்வின் பால், 25, ஆகியோர், நடைபாதை மின் விளக்குகளை நேற்று முன்தினம் இரவு அணைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதே குடியிருப்பைச் சேர்ந்த சிவகுமார், 51, என்பவருடன் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சிவகுமார், வீட்டில் இருந்த ஆசிட்டை எடுத்து வந்து இருவர் மீதும் ஊற்றியதில், கையில் காயம் ஏற்பட்டது. அம்பத்துார் போலீசார் சிவகுமாரை கைது செய்தனர்.
தாக்குதலில் காயமடைந்த ஓட்டுநர் உயிரிழப்பு
புளியந்தோப்பு: திண்டிவனத்தைச் சேர்ந்தவர் முருகன், 54. புளியந்தோப்பு, சுந்தரபுரத்தில் தங்கி, சவுகார்பேட்டையில் மீன்பாடி வண்டி ஓட்டி வந்தார். கடந்த 11ம் தேதி சுந்தரபுரத்தில் வண்டியை நிறுத்தியபோது, ஜான்சன், 53, என்பவருடன் தகராறு ஏற்பட்டது. இதில், ஜான்சன் தாக்கியதில் படுகாயமடைந்த முருகன், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, ஜான்சன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை, பேசின்பாலம் போலீசார் கொலை வழக்காக மாற்றி, அவரை கைது செய்தனர்.
மாத்திரை சாப்பிட்டு துாங்கியவர் பலி
கொடுங்கையூர்: கொடுங்கையூர் விவேகானந்தர் நகரைச் சேர்ந்தவர் ராகேஷ். இவரது ஹார்டுவேர்ஸ் கடையில், ராஜஸ்தானைச் சேர்ந்த குல்தீப் பிரஜாபத், 23, என்பவர், மேல்தளத்தில் தங்கி வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு உடல்நிலை சரியில்லாததால், அருகிலுள்ள மருந்து கடையில் மாத்திரை வாங்கி சாப்பிட்டு துாங்கியுள்ளார். நேற்று காலை குல்தீப் இறந்து கிடந்தார். கொடுங்கையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
ரூ.1.60 லட்சம் ஓப்பியத்துடன் 'வியாபாரி' கைது
யானைகவுனி: சவுகார்பேட்டை, நாராயணன் முதலி தெருவில் சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை யானைகவுனி போலீசார் சோதனை செய்தனர். அவரது பாக்கெட்டுகளில் ஓப்பியம் எனும் போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், ஆந்திராவைச் சேர்ந்த சர்வம், 51, என்பதும், ராஜஸ்தான் சென்று ஓப்பியம் வாங்கி வந்து, சவுகார்பேட்டையில் விற்பனை செய்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், 1.60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1 கிலோ ஓப்பியம் போதை பொருளை பறிமுதல் செய்தனர்.
கடையில் திருட முயன்ற 3 பேர் 'எஸ்கேப்'
சேலையூர்: சேலையூர், ஐ.ஏ.எப்., சாலையில் உள்ள கடையின் அருகே, நேற்று அதிகாலை முகமூடி அணிந்த மூன்று பேர் கடை அருகே நின்றனர். ஆள் நடமாட்டத்தை கண்டதும் மூவரும் இருசக்கர வாகனத்தில் தப்பினர்.
இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சேலையூர் போலீசார் வழக்கு பதிந்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
