UPDATED : அக் 10, 2026 12:00 AM
ADDED : அக் 09, 2026 07:28 PM

போதை தகராறில் இருவர் மண்டை உடைப்பு
கொடுங்கையூர், முத்தமிழ் நகரைச் சேர்ந்த, பிளம்பர் வடிவேலன், 45, எம்.ஆர்.நகரில் உள்ள மதுக்கடையில், கோகுல், 23, என்பவருடன் நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டது. இதில், பீர் பாட்டிலால் வடிவேலன் மண்டை உடைக்கப்பட்டது. விசாரித்த போலீசார் எருக்கஞ்சேரி கோகுலை, நேற்று கைது செய்தனர். அதேபோல் வடக்கு கடற்கரை பகுதியில் நரேஷ், 22, என்பவரை மது வாங்கி தரச்சொல்லி மண்டையை உடைத்த முருகவேல், 21, அருண்குமார், 26, ஆகியோர் கைதாகினர்.
வாலிபரை வெட்டிய ஐவர் சிக்கினர்
புழல்: மஞ்சம்பாக்கம், எல்லையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த, உணவு டெலிவரி ஊழியர் பவன்குமார், 26, என்பவரை, கதிர்வேடு அருகே இரு நாட்களுக்கு முன் ஒரு கும்பல் வழிமறித்து கத்தியால் வெட்டியது. புழல் போலீசார் விசாரித்து அண்ணா நகரைச் சேர்ந்த பிரசாந்த், 20, ராஜேஷ், 23, சுந்தர்ராஜ், 19, பாலாஜி, 21, கனிஷ்குமார், 21, ஆகியோரை, நேற்று கைது செய்தனர். முன்விரோதத்தால், கொலை செய்யும் நோக்கோடு பவன்குமாரை வெட்டியது தெரிந்தது.
ஆபாசமாக பேசி பெண்ணை தாக்கியவர் கைது
சிந்தாதிரிப்பேட்டை: சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த 33 வயது பெண், கடந்த 7ம் தேதி இரவு வீட்டருகே உள்ள கடையில் டீ வாங்கச் சென்றார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ், 35, அவரை வழிமறித்து ஆபாசமாக பேசி தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்தார். சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதே காவல் நிலையத்தின் பழைய குற்றவாளியான நாகராஜை நேற்று கைது செய்தனர்.
‘பார்’ ஊழியரை தாக்கிய மூவருக்கு ‘காப்பு’
வியாசர்பாடி: சிவகங்கையைச் சேர்ந்தவர் கோபிநாதன், 50; வியாசர்பாடி, மேல்பட்டி பொன்னப்பன் தெரு ‘டாஸ்மாக்’ கடை சப்ளையர். கடந்த 7ம் தேதி மதுக்கூடத்தில் மது அருந்திய ஏழு பேர் கஞ்சா புகைத்துள்ளனர். கோபிநாதன் தட்டிக்கேட்டதால், அவரை அந்த கும்பல் தாக்கி தப்பியது. வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, வியாசர்பாடியைச் சேர்ந்த பரத், 27, மாதவன், 25, ராஜேஷ், 25, ஆகிய மூவரையும் நேற்று கைது செய்தனர்.
ஆட்டோ கண்ணாடி உடைத்தவர்களுக்கு வலை
வியாசர்பாடி: அயனாவரத்தைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன், 50. மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் சுடுகாட்டு மேற்பார்வையாளர். அமரர் ஊர்தி, ஐஸ்பாக்ஸ் உள்ளிட்டவற்றை வாடகைக்கும் விடுகிறார். 7ம் தேதி இரவு கடையை பூட்டாமல் சென்றார். காலை, அலுவலக கண்ணாடி, நண்பர்கள் குமார், தினேஷ்குமார் ஆகியோரின் ஆட்டோ கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்தன. புகாரின்படி, செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
கார் ஓட்டுநரை வெட்டியவர் சிக்கினார்
அரும்பாக்கம்: திருமுல்லைவாயலைச் சேர்ந்தவர் ஆனந்த், 37; கார் ஓட்டுநர். நேற்று முன்தினம் இரவு, அரும்பாக்கம் பகுதியில் மது போதையில் தாறுமாறாக இருசக்கர வாகனம் ஓட்டிய ராமாபுரத்தைச் சேர்ந்த செல்வம், 27, என்பவரை, ஆனந்த் தட்டிக்கேட்டார். தகராறில், காய்கறி வெட்டும் கத்தியால் ஆனந்தின் தலையில் வெட்டி செல்வம் தப்பினார். ஆனந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அரும்பாக்கம் போலீசார், செல்வத்தை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆட்டோவுக்கு தீ: மேலும் ஒருவர் கைது
வியாசர்பாடி: வியாசர்பாடி, காந்திபுரம் பகுதியில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த பார்த்தசாரதி, 50, என்பவரின் ஆட்டோவை, மர்மநபர்கள் கடந்த 4ம் தேதி தீ வைத்து எரித்த்னர். இவ்வழக்கில், ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், இதில் தொடர்புடைய பார்த்தசாரதி, 30, என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
பஸ் ஊழியர்களை தாக்கிய 2 பேர் கைது
எம்.ஜி.ஆர்., நகர்: சிறுசேரியில் இருந்து பெங்களூருக்கு கடந்த 6ம் தேதி இரவு சென்ற தனியார் ஆம்னி பேருந்தில், தரமணி அருகே 25 வயது பெண் ஏறினார். இரண்டு இருக்கைகளுக்கு முன்பதிவு செய்த நிலையில், மற்றொரு நபர் வராதது குறித்து நடத்துநர் டேனியல் கேள்வி எழுப்பியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பெண்ணின் அழைப்பின்பேரில் வந்த கே.கே.நகரைச் சேர்ந்த விக்னேஷ் கண்ணன், 27, அவரது தம்பி தினகர், 24, ஆகியோர் நடத்துநர், ஓட்டுநர் அரவிந்த், 31, ஆகியோரை தாக்கினர். போலீசார் விசாரித்து, இருவரையும் நேற்று கைது செய்தனர்.
