தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/கிரைம் கார்னர்: சென்னை

கிரைம் கார்னர்: சென்னை

கிரைம் கார்னர்: சென்னை


ADDED : நவ 28, 2026 10:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 28, 2026 10:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பணியாற்றிய கடையில் கையாடல்: ஊழியருக்கு ‘கம்பி’

ஆதம்பாக்கம்: ஆலந்துார் மசூதி தெருவைச் சேர்ந்தவர் சேக்முகமது, 32; ஆதம்பாக்கம் கரிகாலன் தெருவில் துணிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையின் முழு பொறுப்பையும் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியைச் சேர்ந்த அஸ்கர்அலி, 50, எட்டு மாதங்களாக கவனித்து வந்தார். கடந்த 8ம் தேதி கடையின் வரவு, செலவு கணக்குகளை சேக்முகமது ஆய்வு செய்தபோது, வருமானத்தில் இருந்து சிறுகச் சிறுக 3.5 லட்சம் ரூபாயை, அஸ்கர்அலி திருடியது தெரியவந்தது. புகாரின்படி ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்து நீதிமன்ற உத்தரவுபடி சிறையில் அடைத்தனர்.

மூதாட்டியிடம் அத்துமீறிய போதை ஆசாமி கைது

ஜெ.ஜெ.நகர்: ஜெ.ஜெ.நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், 64 வயது மூதாட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, மதுபோதையில் உள்ளே புகுந்த அண்ணாநகர் மேற்கு விரிவாக்கத்தைச் சேர்ந்த ராஜேஷ், 35, படுக்கையறையில் மூதாட்டி அருகே படுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றார். மூதாட்டியின் கூச்சலைக் கேட்டு அங்கு வந்தவர்கள், ராஜேஷை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். ஜெ.ஜெ.நகர் போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது அம்பத்துார் காவல் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது.

மதுக்கடையில் தகராறு: தொழிலாளிக்கு பாட்டில் அடி

நெசப்பாக்கம்: எம்.ஜி.ஆர்., நகர் சூளைப்பள்ளம் காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் ராகவேந்திரர், 36; கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு, நெசப்பாக்கம் ராமாபுரம் பிரதான சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்க நின்ற போது, அங்கு வந்த சூளைப்பள்ளத்தைச் சேர்ந்த தீனதயாளன், 26, நெசப்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ், 33, மற்றும் 17 வயது சிறுவன் அவர் மீது மோதினர். இதனால் ஏற்பட்ட தகராறில், மூவரும் மது பாட்டிலால் ராகவேந்திரரின் நெற்றி, தலையின் பின்பகுதியில் தாக்கினர். காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எம்.ஜி.ஆர்., நகர் போலீசார் மூவரையும் கைது செய்தனர்.

இரும்பு கடையின் பூட்டை உடைத்து திருட்டு

அண்ணா நகர்: அம்பத்துார், சூரப்பட்டு பாரதிதாசன் நகர், இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் மகாராஜன், 65; அண்ணாநகர் எம்.ஜி.ஆர்., காலனி, ஏழாவது பிரதான சாலையில் இரும்புக்கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று காலை கடையை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, கல்லாவில் இருந்த 10 ஆயிரம் ரூபாயை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பேருந்தில் ‘பர்ஸ்’ பறித்த ஒடிஷா நபருக்கு ‘தர்ம அடி’

அம்பத்துார்: அம்பத்துார் அடுத்த திருமுல்லைவாயல் கொள்ளுமேடு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார், 42. நேற்று மதியம் அம்பத்துார் தொழிற்பேட்டை சந்திப்பில் சிதம்பரம் செல்லும் பேருந்தில் ஏறிய போது, அவரது பர்சை பறித்துக்கொண்டு மர்மநபர் தப்ப முயன்றார். சுரேஷ்குமாரின் கூச்சலைக் கேட்டு சக பயணியர் அவரை பிடித்து தாக்கி, அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இந்திர முட்லி, 22, என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

போன், பணம் திருடிய வாலிபர் சிக்கினார்

நொளம்பூர்: நெற்குன்றம் தனலட்சுமி நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன், 38; எலக்ட்ரீஷியன். இவர், கடந்த ஜூலை மாதம் நொளம்பூர் அண்ணாமலை அவென்யூ பகுதியில் கட்டடப் பணியிடத்தில் படுத்து உறங்கினார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது, மூன்று மொபைல்போன்கள், 20 ஆயிரம் ரூபாய் திருடுபோனது தெரியவந்தது. புகாரின்படி நொளம்பூர் போலீசார் விசாரித்து, கூட்டாளிகளுடன் திருட்டில் ஈடுபட்ட திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடியைச் சேர்ந்த கார்த்திக், 26, என்பவரை நேற்று முன்தினம் கைது செய்து, ஒரு மொபைல்போனை பறிமுதல் செய்து, அவரை சிறையில் அடைத்தனர். தலைமறைவான இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

செயின், போன்கள் வழிப்பறி: இருவருக்கு ‘காப்பு’

ஆவடி: ஆவடி அடுத்த கர்லபாக்கம் திரவுபதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் திவாகர், 17. இவர், நேற்று முன்தினம் மாலை அயப்பாக்கம் ஜெயின் கோவில் ஏரிக்கரை அருகே நண்பர் கரணுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த நான்கு பேர், இருவரையும் மிரட்டி, திவாகரின் ஒரு சவரன் தங்கச் செயின், ஆயிரம் ரூபாய், மற்றும் இருவரின் மொபைல்போன்களை பறித்தனர். மேலும், கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தப்பினர். அயப்பாக்கம் போலீசார் விசாரித்து, அப்பகுதியைச் சேர்ந்த சிவக்குமார், 25, கோபிநாத், 27, ஆகியோரை நேற்று கைது செய்து, ஒரு மொபைல்போனை பறிமுதல் செய்தனர்.

இதே போல், தி.நகர் சிவசைலம் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த ‘டிராவல்ஸ்’ உரிமையாளர் பழனிவேல், 49; நேற்று அதிகாலை தியாகராயா சாலையில் நடைபயிற்சி சென்றார். ஸ்கூட்டரில் பின்னால் வந்த மூவர், அவரது மொபைல் போனை பறித்து தப்பினர். இதுகுறித்து பாண்டிபஜார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

செம்பரம்பாக்கம் ஏரியில் இளைஞர் சடலம் மீட்பு

குன்றத்துார்: குன்றத்துார் அருகே சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நந்தம்பாக்கம், தாராபுரம் பகுதியில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில், 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் சடலம் நேற்று கரை ஒதுங்கியது. இதைப் பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற சோமங்கலம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஜீன்ஸ் பேன்ட், சட்டை அணிந்திருந்த இளைஞர் ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரிக்கின்றனர். அடையாளம் தெரியாத அவரது விபரங்களையும் சேகரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us