கிரைம் கார்னர்: பிரியாணி மாஸ்டரை தாக்கியவர் கைது
கிரைம் கார்னர்: பிரியாணி மாஸ்டரை தாக்கியவர் கைது
ADDED : மார் 25, 2026 08:11 PM
கே.கே.நகர்: பெரம்பலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன், 37; பிரியாணி மாஸ்டர். இவர், கே.கே.நகர், ராஜமன்னார் சாலையில் உள்ள ஹோட்டலில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் ஹோட்டல் அருகே, அதே பகுதியைச் சேர்ந்த கதிர்வேலு, 41 என்பவர், லட்சுமணனிடம் வீண் தகராறு செய்து, தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். மேலும், கல்லால் முகத்தில் தாக்கி சென்றார். பலத்த காயமடைந்த லட்சுமணன், மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விசாரித்த கே.கே.நகர் போலீசார், கதிர்வேலுவை கைது செய்தனர்.
***
பேட்டரி திருடிய வாலிபருக்கு 'காப்பு'
சாஸ்திரிநகர்: பெசன்ட்நகர், பீச் ஹோம் அவென்யூவைச் சேர்ந்தவர் சீனிவாசன், 62. கடந்த 22ம் தேதி, வீட்டின்முன் நிறுத்தப்பட்டிருந்த இவரது ஆட்டோவில் இருந்து பேட்டரி திருடப்பட்டது. சாஸ்திரி நகர் போலீசாரின் விசாரணையில், பெசன்ட் நகர், ஊரூர் குப்பத்தைச் சேர்ந்த திலீப்ராஜ், 19, என்பவர் திருடியது தெரிந்தது. நேற்று அவரை கைது செய்த போலீசார், பேட்டரியை பறிமுதல் செய்தனர்.
***
வழிப்பறி வழக்கில் மூவர் சிக்கினர்
சென்னை: ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவி, 42. இவர், செங்குன்றத்தில் உள்ள ஹோட்டலில் பணிபுரிகிறார். கடந்த, 23ம் தேதி இரவு திருவல்லிக்கேணி, பெல்ஸ் சாலை வழியாக நடந்து சென்றார். அப்போது மர்மநபர்கள் மூவர் அவரை வழிமறித்து, கத்தி முனையில் தாக்கி, 750 ரூபாய் பறித்துச் சென்றனர். விசாரித்த திருவல்லிக்கேணி போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட திருவல்லிக்கேணியைச் சேர்ந்த வினோத், 25, விக்னேஷ்வரன், 19, ரவிசங்கர், 20 ஆகியோரை கைது செய்தனர்.
***
அச்சக குடியிருப்பில் திருடியவர் கைது
புதுவண்ணாரப்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டை, காமராஜர் சாலையில் உள்ள அரசு அச்சக குடியிருப்பைச் சேர்ந்தவர் ரிச்சார்ட் சாமுவேல், 30. அரசு அச்சக ஊழியர்களுக்காக, புது குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், பழைய குடியிருப்பில் புகுந்த மர்ம நபர்கள், ஒரு வீட்டில் இருந்த காப்பர் ஒயர்களை திருடினர். ரிச்சர்ட் சாமுவேல் சத்தம்போடவே இருவரும் தப்பினர். விசாரித்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார், திருட்டில் ஈடுபட்ட புதுவண்ணாரப்பேட்டை, மங்கம்மாள் தோட்டம் பகுதியைச் சேர்ந்த அரவிந்தன், 34, என்பவரை கைது செய்து, 3 கிலோ காப்பர் ஒயர்களை மீட்டனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.
***
வாலிபர் துாக்கிட்டு தற்கொலை
மணிமங்கலம்: மணிமங்கலம், புஷ்பகிரி, 1வது தெருவில் உள்ள தனியார் இடத்தில், மாமரத்தில், 22 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, தாம்பரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரித்தனர். அதில், இறந்தவர், மணிமங்கலத்தை அடுத்த சிறுமாத்துார், குன்றுமேடு பகுதியை சேர்ந்தவர் பாலாஜி, 22, என்பது தெரியவந்தது.
பத்து நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் சுற்றித்திரிந்த அவர், புடவையில் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதும் விசாரணையில் தெரியவந்தது.
