
விடுதி பெண்ணிடம் அத்துமீறல்
வேளச்சேரியில் உள்ள மகளிர் விடுதி ஒன்றில், பெண் ஒருவர் அயர்ந்து துாங்கி கொண்டிருந்தபோது, உடம்பில் யாரோ வருடுவதை உணர்ந்து கூச்சலிட்டார். அப்போது, மர்ம நபர் தப்பியோடினார். வேளச்சேரி போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட வேளச்சேரியைச் சேர்ந்த லட்சுமணன், 25, என்பவரை நேற்று கைது செய்தனர். விடுதிகளில் புகுந்து பெண்களிடம் அத்துமீறுவதை அவர், வாடிக்கையாக வைத்திருந்தது விசாரணையில் தெரிந்தது.
பைனான்ஸ் நிறுவன அதிகாரி கைது
பூந்தமல்லி, பிராடிஸ் சாலையில் இயங்கி வரும் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில், நேற்று மாலை அதிரடியாக நுழைந்த கர்நாடக மாநில போலீசார், அங்கு சூப்பர்வைசராக பணியாற்றும் உதயா, 40, என்ற நபரை, பணமோசடி வழக்கில் கைது செய்ய வந்துள்ளதாக தெரிவித்தனர். இதற்கு சக ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, பூந்தமல்லி போலீசாரின் உதவியுடன், உதயாவை கைது செய்து கர்நாடகவுக்கு அழைத்து சென்றனர்.
கஞ்சா விற்ற வங்கதேச பெண்
வங்கதேசத்தை சேர்ந்த முஸ்கான், 25, என்பவர், கஞ்சா கடத்தி வந்து திருவல்லிக்கேணியில் விற்பனை செய்து வந்தார். இவரை அண்ணா நகர் போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
160 ஹெராயின் கேப்சூல் பறிமுதல்
அனகாபுத்துார், சீனிவாச புரம் சந்திப்பு அருகே, போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட, அசாம் மாநில நபரான ஹரிபுல் இஸ்லாம், 29 என்பவரை நேற்று முன்தினம், சங்கர் நகர் போலீசார் கைது செய்து, 10 ெஹராயின் கேப்சூல் பறிமுதல் செய்தனர். அவர் அளித்த தகவலின்படி, சுங்குவார்சத்திரத்தைச் சேர்ந்த முகமது இம்ரான், 22, ரிஷபுல் இஸ்லாம், 30 ஆகியோரை கைது செய்து, 150 ெஹராயின் கேப்சூல்களை பறிமுதல் செய்தனர்.
வழிப்பறி திருடர்களுக்கு 'காப்பு'
திரு.வி.க.நகர் கம்பர் தெரு வழியாக, நேற்று இரவு 10:30 மணியளவில் நடந்து சென்ற பெரம்பூரைச் சேர்ந்த லோகேஷ், 27, கிஷோர், 20, ஆகியோரிடம், வழிப்பறியில் ஈடுபட்ட புளியந்தோப்பைச் சேர்ந்த ஆகாஷ் 19, விக்னேஷ், 21, ஆகியோரை, புளியந்தோப்பு போலீசார் நேற்று கைது செய்தனர்.
போலீசை தாக்க முயன்ற ரவுடி கைது
புளியந்தோப்பு, கே.எம்., கார்டன் விளையாட்டு மைதானம் அருகே, கடந்த 16ம் தேதி மதுபோதையில் ரவுடிகள் கபாலி, 34, பிரகாஷ்,28, ஆகியோர் தகராறில் ஈடுபட்டுள்ளனர். விசாரிக்க சென்ற, புளியந்தோப்பு போலீஸ் ஏட்டு பாலசுப்பிரமணியத்தை தாக்க முயன்றனர். பிரகாஷ் சிக்க, கபாலி தலைமறைவானார். அவரை புளியந்தோப்பு போலீசார் நேற்று கைது செய்தனர்.
3 டூ - வீலர்கள் தீக்கிரை
ஆர்.ஏ.புரம், எஸ்.கே.பி.,புரம், 2வது தெருவைச் சேர்ந்தவர் தினேஷ், 28. நேற்று அதிகாலை, 3:30 மணியளவில் இவரது டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., மொபட் உட்பட, மூன்று இருசக்கர வாகனங்கள் மர்மமான முறையில் எரிந்துக் கொண்டிருந்தன. இதில், மூன்று வாகனங்களும் தீக்கிரையாயின. அபிராமபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
சாலையில் முறிந்து
விழுந்த மரம்
மந்தைவெளியில், 4வது டிரஸ்ட் குறுக்கு தெருவில் இருந்த மரம், திடீரென முறிந்து விழுந்தது. தகவலறிந்து வந்த மாநகராட்சியினர், இயந்திரம் மூலம் மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினர். உட்புற சாலை என்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.

