
போலீசுக்கு 'தண்ணி'காட்டியவர் பிடிபட்டார்
புளியந்தோப்பைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவர், 2020ல் கொலை செய்யப்பட்டார். பேசின்பாலம் போலீசார், கொருக்குப்பேட்டை பிரகாஷ், 25 உட்பட, எட்டு பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். சில மாதங்களிலேயே ஜாமினில் வெளியே வந்த பிரகாஷ், தலைமறைவானார். நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்த நிலையில், பேசின்பாலம் போலீசார் பிரகாஷை, நேற்று முன்தினம் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
போதை மாத்திரை விற்ற இருவர் சிக்கினர்
* தண்டையார்பேட்டை சேனியம்மன் கோவில் தெருவில், வலி நிவாரண மாத்திரைகளை, போதை மாத்திரை என விற்பனை செய்த, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ரித்திக்தரன், 20, புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த பார்த்தசாரதி, 20, ஆகியோரை, நேற்று போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 100 மாத்திரைகள், பைக் மற்றும் மொபைல்போன் பறிமுதல் செய்யப்பட்டன.
வீடு புகுந்து திருட முயன்றவர் கைது
கொளத்துார், சிவசக்தி நகர், நான்காவது தெருவைச் சேர்ந்தவர் வேலாயுதம், 60; ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக ஊழியர். இவர், குடும்பத்துடன் திருச்செந்துார் சென்று, 15ம் தேதி வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. ஆனால், நகை பணம் எதுவும் திருடு போகவில்லை. இது குறித்த புகாரின்படி, ராஜமங்கலம் போலீசார் விசாரித்தனர். இதில், அதே பகுதியைச் சேர்ந்த அருண், 19, என தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

