வழிப்பறி திருடர்கள் இருவர் கைது
பெரம்பூர், வடிவேல் தெருவில் மாநகராட்சி சார்பில் நடந்து வரும் மழைநீர் வடிகால்வாய் பணியை, பொறியாளர் ராமன், 36, என்பவர் கண்காணித்து வருகிறார். கடந்த 28ம் தேதி இரவு பணித்தளத்தில் திருட முயன்ற இருவரை பிடிக்க அவர் முயன்றார். அப்போது திருடர்கள் கத்தி முனையில் 2,000 ரூபாயை பறித்துச் சென்றனர். செம்பியம் போலீசார், திருட்டில் ஈடுபட்ட புளியந்தோப்பைச் சேர்ந்த செல்வகுமார், 26, வியாசர்பாடியைச் சேர்ந்த பிரசாந்த், 26, ஆகியோரை கைது செய்தனர்.
மர்மமான முறையில் கார் தீக்கிரை
முகப்பேர் மேற்கு, சந்தான சீனிவாச பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி, 53. வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இவரது, 'மஹிந்திரா சைலோ' கார், நேற்று முன்தினம் இரவு மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்தது. ஜெ.ஜெ.நகர் தீயணைப்பு நிலைய வீரர்கள், அரைமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் கார் தீக்கிரையானது. நொளம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
கோயம்பேடு சந்தையில் தீ விபத்து
விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஹரிகுமார், 46, கோயம்பேடு பழ சந்தையில், வாழைப்பழம் மொத்த வியாபார கடை வைத்துள்ளார். கடை ஊழியரான வட மாநிலத்தைச் சேர்ந்த ரிஸ்வான், 20, என்பவர், நேற்று முன்தினம் இரவு கடையில் துாங்கி கொண்டிருந்தார். அப்போது, திடீரென கடை தீப்பற்றி எரிந்துள்ளது. அனல் அடித்ததால் எழுந்த ரிஸ்வான், வெளியே ஓடி தப்பினார். கோயம்பேடு தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர்.
மது விற்பனை பெண்கள் கைது
ஓட்டேரி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட கே.எச்., சாலையில் கள்ளச்சந்தையில் மது விற்ற ஓட்டேரியைச் சேர்ந்த நாகம்மாள், 58, டில்லி, 65 மற்றும் பாபி, 55, உள்ளிட்ட மூன்று பெண்களை போலீசார், நேற்று காலை கைது செய்தனர். 40 குவார்ட்டர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

