
கதவை உடைத்து
நகை, பணம் திருட்டு
முடிச்சூர்: தாம்பரத்தை அடுத்த முடிச்சூர், துர்கா அவென்யூவைச் சேர்ந்தவர் இந்திரன், 40. கடந்த 28ம் தேதி இரவு, காஞ்சிபுரத்தில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றிருந்தார். நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். அப்போது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, மூன்றரை சவரன் நகை, 60,000 ரூபாய் திருட்டு போயிருந்தது. இது குறித்து, பீர்க்கன்காரணை போலீசார் விசாரிக்கின்றனர்.
மண் கடத்தல்
லாரி பறிமுதல்
சேலையூர்: செங்கல்பட்டு மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை, பீர்க்கன்காரணையை அடுத்த வெங்கம்பாக்கத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த லாரியை மடக்கினர். அதிகாரிகளை பார்த்ததும் ஓட்டுநர், வாகனத்தை விட்டு விட்டு தப்பி ஓடினார். விசாரணையில், உரிய அனுமதியின்றி கிராவல் மண் கடத்துவது தெரிய வந்தது. லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தலைமறைவு
நபர் சிக்கினார்
அசோக் நகர்: அசோக் நகரில் 'மெத் ஆம்பெட்டமைன்' போதை பொருள் விற்பனை செய்த சம்பவத்தில், போதை பொருள் நுண்ணறிவு பிரிவு மற்றும் அசோக் நகர் போலீசார் இணைந்து, 12 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய வடபழனியை சேர்ந்த பிரபாகரன், 34 என்பவரை தேடி வந்தனர். இந்நிலையில், வடபழனி பணிமனை அருகே பதுங்கியிருந்த பிரபாகரனை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
கஞ்சா விற்பனை
5 வாலிபர்கள் கைது
பள்ளிக்கரணை: பள்ளிக்கரணை, காமகோட்டி நகர் பகுதியில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கிங்ஸ்லி பால், 22, தேவேந்திரன், 24, தினேஷ்குமார், 30, ஆகியோரை, பள்ளிக்கரணை போலீசார் நேற்று கைது செய்தனர். அதேபோல, கொடுங்கையூர், திருவள்ளுவர் சாலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த அரசுகுமார், 19, என்பரை கொடுங்கையூர் போலீசார் கைது செய்தனர். மேலும், வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகரில் கஞ்சா விற்ற கொளத்துாரைச் சேர்ந்த சூர்யா, 30, என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார்.