டூ வீலரை எரித்த இருவர் கைது
கோவிலம்பாக்கம்: கோவிலம்பாக்கம், சத்யா நகர், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் டில்லிபாபு. நேற்று முன்தினம் காலை, வீட்டு முன் நிறுத்தி வைத்திருந்த இவரது 'டியோ' இருசக்கர வாகனத்தில், மர்ம நபர்கள் தீ வைத்து தப்பிச் சென்றனர்.
புகாரின்படி விசாரித்த மேடவாக்கம் போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட, அதே தெருவை சேர்ந்த பாலா, 32, மற்றும் கோவிலம்பாக்கம், பெருமாள் நகரை சேர்ந்த அஜித்குமார், 27, ஆகியோரை கைது செய்தனர்.
போதை மாத்திரை விற்றவர் கைது
வண்ணாரப்பேட்டை: வண்ணாரப்பேட்டை பகுதியில், நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நபரை விசாரித்தனர்.
அவரை சோதனை செய்தபோது, அவர் உடல் வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவர் பழைய வண்ணாரப்பேட்டை, முத்தையா தெருவை சேர்ந்த தமீம், 26, என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், 80 போதை மாத்திரைகள் மற்றும் 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மாணவனிடம் வழிப்பறி இருவர் கைது
சென்னை: ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில் படித்து வருபவர் தீபக், 16. அவர் சென்னையில் உள்ள தனியார் கல்லுாரி வாயிலாக கிரிக்கெட் பயிற்சி பெற்று வருகிறார்.
கடந்த 2ம் தேதி, சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் நடந்து சென்ற அவரை வழிமறித்து, அடையாளம் தெரியாத இருவர், கத்தி முனையில் மொபைல் போன் மற்றும் 2,000 ரூபாயை பறித்து தப்பினர்.
சேத்துப்பட்டு போலீசார் விசாரணையில், ஓட்டேரியைச் சேர்ந்த ஆளவந்தான், 24, மடிப்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ், 24, ஆகியோர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. நேற்று இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
சொகுசு கார் தீ பற்றி எரிந்து நாசம்
சென்னை: அம்பத்துாரைச் சேர்ந்தவர் தேஜஸ், 20; கல்லுாரி மாணவர். நேற்று காலை, கல்லுாரிக்கு பி.எம்.டபிள்யூ சொகுசு காரில் நண்பர்களுடன் சென்றார்.
அரும்பாக்கம் அண்ணா வளைவு அருகே சென்றபோது, காரின் முன்பகுதியில் புகை வந்துள்ளது. உடனே காரை நிறுத்தி, அவர் இறங்கிய சிறிது நேரத்திலேயே கார் தீப்பற்றி எரிந்தது. சம்பவம் அறிந்து வந்த கீழ்ப்பாக்கம் தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். அரும்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.