மாணவி கர்ப்பம்
சிறுவனிடம்
கிடுக்கி
புளியந்தோப்பு: புளியந்தோப்பு காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு பள்ளியில், வழக்கமாக நடக்கும் மருத்துவ பரிசோதனையில், பிளஸ் 2 மாணவி, ஆறு மாதம் கர்ப்பமாகி இருப்பது தெரிய வந்தது. இது குறித்து மாணவியின் பெற்றோர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விசாரணையில், புளியந்தோப்பு, நரசிம்மன் நகரைச் சேர்ந்த 17 வயது சிறுவனும், மாணவியும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வருவதும், வீட்டில் யாரும் இல்லாதபோது, அடிக்கடி தனிமையில் சந்தித்துக் கொண்டதும் தெரிய வந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.
தலைமறைவு
குற்றவாளி
சிக்கினார்
தேனாம்பேட்டை: தேனாம்பேட்டையைச் சேர்ந்த நவநீத கிருஷ்ணன் என்பவரை 2003ல் கொலை செய்ய முயற்சி வழக்கில் உமேஷ், 23, என்பவரை, தேனாம்பேட்டை போலீசார் கைது செய்தனர். ஜாமினில் வெளியே வந்தவர் தலைமறைவானார். விசாரணைக்கு ஆஜராகாததால், அக்., 9ம் தேதி நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. அவரை தேடி வந்த போலீசார், நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.
விநாயகர் கோவில்
உண்டியல் உடைத்து திருட்டு
பெரம்பூர்: பெரம்பூர், வீனஸ் மார்க்கெட் அருகே உள்ள வரசக்தி விநாயகர் கோவிலை, அதே பகுதியை சேர்ந்த வீரப்பன், 75, என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக நிர்வகித்து வருகிறார். நேற்று காலை 6:00 மணியளவில் கோவிலில் கோலம் போடுவதற்காக, அங்கு வேலை செய்யும் பெண் சென்ற போது, உண்டியலை உடைத்து திருட்டு நடந்திருப்பது தெரிய வந்தது. இது குறித்து செம்பியம் போலீசார் விசாரிக்கின்றனர்.
5 சவரன் நகை
திருடிய வாலிபர் கைது
அம்பத்துார்: அம்பத்துார், வெங்கடபுரம், கே.கே., சாலை பகுதியைச் சேர்ந்தவர் அருள், 41; தனியார் நிறுவன ஊழியர். கடந்த மாதம் 30ம் தேதி, இவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ஐந்து சவரன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போயின.
அம்பத்துார் போலீசார் விசாரித்து, பட்டினப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அஜய், 20, என்ற வாலிபரை கைது செய்து, நகையை மீட்டனர். பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவரை நேற்று சிறையில் அடைத்தனர்.