
ஆட்டோ மோதி
பாதசாரி பலி
நீலாங்கரை: சின்ன நீலாங்கரையைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 49; டைல்ஸ் கற்கள் ஒட்டும் வேலை செய்பவர். நேற்று முன்தினம், இ.சி.ஆர்., கொட்டிவாக்கம் பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது, ஆட்டோ மோதி பலத்த காயமடைந்தார். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று பலியானார். அடையாறு போலீசார், நெற்குன்றத்தைச் சேர்ந்த பெண் ஆட்டோ ஓட்டுநர் ஆனந்தி, 30, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
அரிவாளுடன் 'வீடியோ'
3 சிறுவர்கள் கைது
கண்ணகி நகர்: கண்ணகி நகரை சேர்ந்த, 17 வயதுக்கு உட்பட்ட மூன்று சிறுவர்கள், தனித்தனியாக இரண்டடி நீள அரிவாளை கையில் வைத்து, புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றினர்.
புகைப்படத்துடன், 'தீபாவளி கணக்கு தீராமா இருக்கு' என, ஆங்கிலத்தில் பதிவு செய்திருந்தனர். இது குறித்த புகாரின்படி, கண்ணகி நகர் போலீசார், மூன்று சிறுவர்களையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.
ராணுவ குடியிருப்பில்
திருடியவர் கைது
தேனாம்பேட்டை: தெலுங்கானாவைச் சேர்ந்தவர் நரேஷ், 37. சென்னை, தேனாம்பேட்டையிலுள்ள ராணுவ குடியிருப்பின் மேற்பார்வையாளர். இம்மாதம் 11ம் தேதி இக்குடியிருப்பைச் சேர்ந்த ஒருவரது வீட்டில், 5,000 ரூபாய் மதிப்புள்ள மின்வடங்கள் மற்றும் குடிநீர் குழாய்கள் திருடுபோயின.
இதுகுறித்து, மேற்பார்வையாளர் நரேஷ், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரித்த போலீசார், திருட்டில் ஈடுபட்ட, மயிலாப்பூரைச் சேர்ந்த ஜெகன், 25, என்பவரை நேற்று கைது செய்தனர்.