ரயிலில் அடிபட்டு ஓய்வுபெற்ற எஸ்.ஐ., பலி
ஆவடி: திருவேற்காடு, சுந்தரசோழபுரம், தனியார் குடியிருப்பை சேர்ந்தவர் பாபு, 60; ஓய்வு பெற்ற எஸ்.ஐ., நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல் நடைபயிற்சி மேற்கொள்ள, ஆவடிக்கு சென்றார்.
வீட்டுக்கு செல்ல, ஆவடி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்கும்போது, அரக்கோணத்தில் இருந்து சென்னை கடற்கரை சென்ற மின்சார ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். சடலத்தை மீட்டு, ஆவடி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
தலைமறைவு
குற்றவாளி கைது
மயிலாப்பூர்: மயிலாப்பூர் பகுதியில், 2020, ஏப்., 21ல் 17 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டான். இவ்வழக்கில் 17 வயது சிறுவர்கள் ஐந்து பேர் உட்பட எட்டு பேர் கைதாகினர்.
உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் இவ்வழக்கில், ஜாமினில் வெளியே வந்த தினேஷ், 23, என்பவர், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார்.
செப்., 29ல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்ததை அடுத்து, மயிலாப்பூர் பகுதிக்கு நேற்று வந்த தினேஷை, போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மீண்டும் சிறையில் அடைத்தனர்.
4 லாரி பேட்டரிகள்
திருட்டு
தாம்பரம்: மேற்கு தாம்பரம், கஸ்துாரி பாய் நகரில், நேற்று முன்தினம் இரவு நிறுத்தப்பட்டிருந்த டாடா மற்றும் பாரத் பென்ஸ் என, இரண்டு லாரிகளில் இருந்து நான்கு பேட்டரிகளை, மர்ம நபர்கள் திருடி சென்றனர். புகாரின்படி, தாம்பரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஆஸி., சென்றவர்
வீட்டில் கைவரிசை
பெரம்பூர்: பெரம்பூர், சாந்தி நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் பிரதீப்குமார், 66. இவர், ஆஸ்திரேலியாவில் உள்ள தன் மகள் நித்யா எலிசபெத் என்பவரை பார்ப்பதற்காக, மனைவியுடன் கடந்த ஜூலை மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. வீடு புகுந்து வெள்ளி பொருட்கள், டிவி, மடிக்கணினி உள்ளிட்டவை திருடியோர் குறித்து, திரு.வி.க., நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.