மனைவியை தாக்கிய
கணவர் கைது
திருவல்லிக்கேணி: திருவல்லிக்கேணி, எஸ்.எம்.நகர் பகுதியைச் சேர்ந்தவர் கணபதி, 25. இவரது மனைவி நதியா, 20, திருவல்லிக்கேணி போலீசில் புகார் அளித்தார். தன் கணவர் தினமும் அடித்து துன்புறத்துவதாக குறிப்பிட்டிருந்தார். போலீசார் நேற்று, கணபதியை கைது செய்தனர்.
இதையறிந்த வி.சி., கட்சியினர் சிலர், கணபதியை விடுவிக்கக்கோரி, போலீசாரை முற்றுகையிட்டனர். போலீசார், அவர்களை சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனர். கணபதி மீது, ஒரு கொலை வழக்கு உட்பட, ஐந்து வழக்குகள் உள்ளன.
இ - பைக் சார்ஜர்
தீப்பிடித்து நாசம்
கோடம்பாக்கம்: கோடம்பாக்கம், ரங்கராஜபுரம் பிரதான சாலையைச் சேர்ந்தவர் ராஜசேகர், 48; 'ஏசி' மெக்கானிக். நேற்று முன்தினம் இரவு, தன் எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தின் பேட்டரியை கழற்றி, வீட்டில் தனி அறையில் சார்ஜ் போட்டிருந்தார்.
நள்ளிரவில் பேட்டரி வெடித்து, தீப்பற்றியதில், பீரோ எரிந்தது. அசோக் நகர் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.
கல்லுாரி மாணவரிடம்
மொபைல் பறிப்பு
ஜெ.ஜெ நகர்: முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவா, 18; கல்லுாரி மாணவர். வீட்டின் அருகே, முகமூடி அணிந்து பைக்கில் வந்த இருவர், கத்தியை காட்டி மிரட்டி, ஜீவாவிடம் மொபைல்போனை பறித்து தப்பினர். இது குறித்து வழக்கு பதிந்த ஜெ.ஜெ., நகர் போலீசார், முகமூடி அணிந்த வழிப்பறி கொள்ளையர்களை தேடுகின்றனர்.
முதியவரிடம்
ரூ.1 லட்சம் பறிப்பு
பெரம்பூர்: பெரம்பூர் அருகே அகரம் கோவிந்தராஜுலு தெருவைச் சேர்ந்தவர் சுகுமார், 67. ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர். நேற்று காலை, பெரியார் நகர் தபால் அலுவலகத்தில் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார்.
வீட்டின் முன் கதவு அருகே, பணத்தை மனைவியிடம் கொடுத்த போது, சுகுமாரை பின்தொடர்ந்து வந்த இருவர், பணத்தை பறித்து பைக்கில் தப்பினார். செம்பியம் போலீசார் விசாரிக்கின்றனர்.

