
தபால் அலுவலகத்தில் திருட்டு
சேலையூர்: மாடம்பாக்கம், ரமணா நகரில் உள்ள தபால் அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. நேற்று காலை இது குறித்து தகவலறிந்த ஊழியர்கள் வந்து, உள்ளே சென்று பார்த்தபோது, எட்டு மொபைல் போன்கள் திருட்டு போனது தெரிய வந்தது. லாக்கர் உடைக்கப்படாததால் பணம் தப்பியது. திருட்டு குறித்து சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
***
வீடு புகுந்து திருடியவர் கைது
சென்னை: ராயப்பேட்டை, திவான் சாஹிப் தெருவைச் சேர்ந்தவர் கார்த்தீஸ்வரி, 32. கடந்த, 6ம் தேதி காலை இவரது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 1 சவரன் செயின், உண்டியல் பணம் திருட்டு போயிருந்தது. விசாரித்த ராயப்பேட்டை போலீசார், திருட்டில் ஈடுபட்ட தரமணியைச் சேர்ந்த சுந்தர்ராஜ், 32 என்பவரை கைது செய்து, செயினை மீட்டனர்.
***
கஞ்சா விற்ற பெண் சிக்கினார்
புளியந்தோப்பு: புளியந்தோப்பு, பட்டாளம், நைனியப்பன் தெரு பகுதியில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட புளியந்தோப்பைச் சேர்ந்த ரேகா, 30 மற்றும் குமரன், 45 ஆகியோரை, போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். ரேகா, தம்பி லோகநாதனின் மனைவியான மியா என்கிற ஆனந்தவல்லிக்காக கஞ்சா விற்று தந்தது தெரியவந்தது.
***
அப்பார்ட்மென்டில் பாலியல் தொழில்
கே.கே.: கே.கே.நகர் 11வது செக்டார் 66வது தெருவில் உள்ள வீட்டில், பாலியல் தொழில் நடப்பதாக விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் அங்கு போலீசார் சோதனை மேற்கொண்டு, அடுக்குமாடி குடியிருப்பில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்த, வியாசர்பாடியைச் சேர்ந்த கார்த்திகா தேவி, 33 மற்றும் ஆர்.ஏ., புரத்தை சேர்ந்த சுந்தரி, 48 ஆகியோரை கைது செய்தனர். அங்கிருந்த இரு பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
***
அடி தடியில் ஈடுபட்ட மாணவர்கள் கைது
நீலாங்கரை: நீலாங்கரையை சேர்ந்தவர் சக்திசுந்தரம், 22. இவர் நேற்று முன்தினம், 'ஹோண்டா சுவிக்' காரை இ.சி.ஆரில் ஓட்டி சென்றார். அப்போது, கல்லுாரி மாணவர்களான ஆகாஷ், 19, கார்த்திக், 21, ஆகியோர் சென்ற பைக், காரில் உரசியதாக கூறப்படுகிறது. இதில், இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. சக்திசுந்தரம் கையால் தாக்கி உள்ளார். பதிலுக்கு, இரண்டு பேரும் சேர்ந்து சக்திசுந்தரத்தை தாக்கியுள்ளனர். இதில் அவரின் மூக்கு கண்ணாடி உடைந்தது. நீலாங்கரை போலீசார் இவரையும் நேற்று கைது செய்தனர்.

