காதல் திருமணம் செய்த நபர் தற்கொலை
தாம்பரம்: மேற்கு தாம்பரம், திருவள்ளுவர் புரத்தைச் சேர்ந்தவர் ஜபித் டைட்டஸ், 25. இவர், மாதவரத்தை சேர்ந்த ரெபேக்கா, 27, என்பவரை காதலித்து, ஒரு மாதத்திற்கு முன் திருமணம் செய்து கொண்டார். அந்த திருமணத்தில், ரெபேக்காவின் பெற்றோருக்கு விருப்பமில்லை என்று கூறப்படுகிறது. ரெபேக்கா ஆங்கிலோ இந்தியன் சமூகத்தை சேர்ந்தவர்.
இரு தினங்களுக்கு முன் ரெபேக்கா, தன் பெற்றோரை சமாதானப்படுத்தி விட்டு வருவதாக கூறி மாதவரத்திற்கு சென்றார். நேற்று அதிகாலை, போதையில் இருந்த ஜபித் டைட்டஸ், 'உன்னை மிஸ் செய்கிறேன்' என, மனைவியிடம் மொபைல் போனில் கூறியுள்ளார். சிறிது நேரத்தில், அவரது மொபைல் போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டது.
இதில், சந்தேகப்பட்டு, ரெபேக்காவும், அவரது பெற்றோரும் வீட்டிற்கு வந்து பார்த்த போது, ஜபித் டைட்டஸ் மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. தாம்பரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
ரூ.6 கோடி டிரேடிங் மோசடி: கேரள நபர் கைது
சென்னை: சென்னையை சேர்ந்த ஐ.எப்.எஸ்., அதிகாரி, அதிக லாபம் ஈட்டும் பங்கு வர்த்தக செயலிகளில் சேருமாறு வந்த 'வாட்ஸாப்' விளம்பரத்தை நம்பி, 6.58 கோடி ரூபாய் முதலீடு செய்தார். பின் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். விசாரணையில், கேரளாவைச் சேர்ந்த மோசடி கும்பல் சிக்கியது. எட்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், யூனுஷ், 45 என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
'டிஜிட்டல்' கைது மோசடியில் ஒருவர் சிக்கினார்
சென்னை: அபிராமபுரத்தைச் சேர்ந்த 72 வயது பெண்ணிடம், மும்பை போலீஸ் எனக்கூறி, உங்களுடைய பெயரில், போதை பொருட்கள், புலித்தோல் உள்ளிட்டவை அனுப்பப்பட்டுள்ளது. அவற்றை நாங்கள் பறிமுதல் செய்து உங்களை டிஜிட்டல் கைது செய்துள்ளதாக கூறி, 4.67 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்துள்ளனர்.
இது குறித்து விசாரித்த சென்னை சைபர் கிரைம் போலீசார், ஏற்கனவே, 15 பேரை கைது செய்துள்ளனர்; 52.68 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டுள்ளது. இதில், 16வது குற்றவாளியான, கேரளாவைச் சேர்ந்த கைலாஷ் நாத், 26 என்பவர், நேற்று கைது செய்யப்பட்டார்.
ரூ.32 லட்சம் மோசடி: இருவர் கைது
சென்னை: நுங்கம்பாக்கத்தை சேர்ந்த பிரமிளா ராமநாதன், 68. இவரின், இறந்துபோன கணவரின் மொபைல்போனுக்கு அழைத்த நபர், மும்பை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் எனக்கூறி, உங்களது வங்கி கணக்கில் மோசடி நடந்துள்ளது என தெரிவித்துள்ளார். இப்பிரச்னையில் இருந்து தப்பிக்க பணம் அனுப்பும்படி கேட்டதை தொடர்ந்து, 32.97 லட்சம் ரூபாயை மூதாட்டி அனுப்பியுள்ளார்.
ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மூதாட்டி, சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். விசாரித்த போலீசார், மயிலாடுதுறையைச் சேர்ந்த மகேஷ், 33, உதயகுமார் ஆகியோரை கைது செய்தனர்.
முதாட்டியிடம் செயின் பறித்தவர் கைது
குன்றத்துார்: குன்றத்துார், கஜலட்சுமி நகரைச் சேர்ந்தவர் கவுசல்யா, 70. அதே பகுதியில் உள்ள பஜனை கோவில் தெருவில், கடந்த 10ம் தேதி நடைபயிற்சி சென்றார். அப்போது, பைக்கில் வந்த நபர் முகவரி கேட்பது போல் நடித்து, கவுசல்யாவின் 5 சவரன் செயினை பறித்து தப்பினார். விசாரித்த குன்றத்துார் போலீசார், திருட்டில் ஈடுபட்ட படப்பை, காந்தி நகரைச் சேர்ந்த பிரதீப், 31; என்பவரை நேற்று கைது செய்து, செயினை மீட்டனர்.
பள்ளி மாணவனிடம் ஸ்கூட்டர் பறிப்பு
தண்டையார்பேட்டை: ராயபுரம், கிரேஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன், 42. இவரது மகன் ஹரிஹரன், 17; பிளஸ் 2 மாணவர். இவர், நேற்று நண்பர்கள் இருவருடன், தண்டையார்பேட்டை, வீராகுட்டி தெருவில் பேசி கொண்டிருந்தார். அங்கு வந்த 30 வயது மதிக்கத்தக்க மர்ம நபர், கத்திமுனையில் ஹரிஹரனிடம் ஸ்கூட்டரை எடுக்குமாறு மிரட்டி, பின்னால் அமர்ந்து சென்றுள்ளார்.
தண்டையார்பேட்டை - திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் போஸ்ட் ஆபீஸ் எதிரே வண்டியை நிறுத்துமாறு கூறி, ஹரிஹரனை இறக்கி விட்டு ஸ்கூட்டருடன் அந்த நபர் தப்பி சென்றார். தண்டையார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
வழிப்பறி திருடர்கள் 3 பேர் கைது
படப்பை: படப்பை அருகே ஆரம்பாக்கத்தில், இரு தினங்களுக்கு முன் வடமாநில தொழிலாளர் ஒருவரை தாக்கிய மர்ம நபர்கள் இருவர், மொபைல் போன் மற்றும் 500 ரூபாயை பறித்து சென்றனர். விசாரித்த படப்பை போலீசார், திருட்டில் ஈடுபட்ட ஆரம்பாக்கத்தைச் சேர்ந்த பிரகாஷ், 20; மோகன், 26; ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.
அதேபோல எம்.கே.பி.நகர், எருக்கஞ்சேரியில் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டி பணப்பறிப்பில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு குற்றவாளியான வியாசர்பாடி, வி.பி.காலனியைச் சேர்ந்த ரவுடி சஞ்சய், 26; என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
ரவுடிகளை வெட்டிய இருவர் கைது
எம்.கே.பி.நகர்: வியாசர்பாடி, எஸ்.எம்.நகரைச் சேர்ந்தவர் கார்த்திக், 26; ஜெ.ஜெ.ஆர்.நகரைச் சேர்ந்தவர் விமல், 26. ரவுடிகளாக வல ம் வந்த இருவரும், வியாசர்பாடி குட்ெஷட் அருகில் நேற்று மது அருந்தினர். அங்கு வந்த மர்ம நபர்கள், திடீரென கார்த்திக்கை தலையிலும், விமலை கையிலும் வெட்டி தப்பினர்.
படுகாயமடைந்த இருவரும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எம்.கே.பி.நகர் போலீசாரின் விசாரணையில், முன்விரோதம் காரணமாக வியாசர்பாடி, முல்லை நகரைச் சேர்ந்த சஞ்சய், 21, எஸ்.எம்.நகரைச் சேர்ந்த ஆகாஷ்குமார், 23 ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.

