கிரைம் கார்னர்
மாணவரிடம் செயின் பறிப்பு
பாண்டி பஜார்: திருவல்லிக்கேணி, டக்டர் நடேசன் தெருவைச் சேர்ந்தவர் ரிஷி கார்த்தி, 18. ராமாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 பயில்கிறார்.
தன் நண்பர் ஜெகதீஷ் என்பவருடன், தி.நகர் திருமலைப்பிள்ளை சாலையில் நேற்று அதிகாலை சென்றபோது, அங்கு நின்ற இரு திருநங்கையரிடம் பேசியுள்ளனர். அப்போது, பைக்கில் பின்னால் வந்த நபர், பணம் கேட்டு இவர்களை மிரட்டியுள்ளார். பணம் அளிக்க மறுக்கவே, ரிஷி கார்த்தி அணிந்திருந்த 1.5 சவரன் செயினை, அந்நபர் பறித்து சென்றார்.
பெண்ணை தாக்கியவர் கைது
போரூர்: அய்யப்பன்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் 29 வயது பெண். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால், 4 வயது குழந்தையுடன் தனியாக வசிக்கிறார்.
காட்டுப்பாக்கத்தில் உள்ள தனியார் ஸ்டூடியோவில் வேலைக்கு சேர்ந்த அப்பெண்ணுக்கும், ஸ்டூடியோ உரிமையாளரான சண்முகப்பிரியன் என்பருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அப்பெண்ணின் சகோதரன் ஸ்டூடியோவிற்கு வந்துள்ளார். அப்போது சண்முகப்பிரியன், பெண்ணின் சகோதரனை தாக்கியுள்ளார். தவிர, அப்பெண்ணையும் தாக்கி தன்னுடன் சேர்த்து எடுத்த புகைப்படங்களை வெளியிடுவதாக கூறி மிரட்டியுள்ளார். அப்பெண் புகாரையடுத்து, போலீசார் சண்முகப்பிரியனை கைது செய்தனர்.
மாமியாரிடம் மருமகன் நகை மோசடி
அயனாவரம்: அயனாவரம், திருமலை ராஜா தெருவைச் சேர்ந்த சசிகலா, 59, தன் மகளை, செகந்திராபாத்தைச் சேர்ந்த வையாபுரி பரந்தாமன், 38, என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார். 2022ல் சசிகலாவின் மகள் விமான விபத்தில் இறந்துவிட்டார்.
இதையடுத்து வையாபுரி, சென்னையில் வீடு வாங்கி, இருவரும் ஒன்றாக வாழலாம் என சசிகலாவிடம் கூறியுள்ளார். அவரிடம் இருந்து 38 லட்சம் ரூபாய் மதிப்பிலான 30 சவரன் நகைகள், வைர மோதிரம், பிளாட்டினம் நகைகளை வாங்கி மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக சசிகலா புகாரையடுத்து வழக்கு பதிந்த அயனாவரம் போலீசார், படப்பையில் தங்கியிருந்த வையாபுரியை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

