மொபைல் போன் திருடிய இருவர் கைது
கொடுங்கையூர்: மாதவரம், கே.கே.ஆர்.டவுனை சேர்ந்தவர் ரசூல், 34; கட்டட மேஸ்திரி. இவர், கொடுங்கையூர், அருள் நகரில், பீஹார் மாநில வாலிபர்கள் 10 பேரை வைத்து, அங்கேயே தங்கி கட்டட வேலை செய்து வருகிறார்.
கடந்த 15ம் தேதி நள்ளிரவு, பைக்கில் வந்த மர்ம நபர்கள், தொழிலாளர்களின் மூன்று மொபைல் போன்களை திருடி சென்றனர். கொடுங்கையூர் போலீசார் விசாரித்து, மொபைல் போன்களை திருடிய வியாசர்பாடியைச் சேர்ந்த தினேஷ், 22, அருள்குமார், 22, ஆகியோரை கைது செய்தனர்.
வழிப்பறி வழக்கில் மேலும் மூவர் சிக்கினர்
பூக்கடை: அண்ணா சாலை, ரிச்சி தெருவைச் சேர்ந்தவர் நரேஷ்குமார், 38. இவர், லேப்டாப் உதிரி பாகங்கள் விற்பனை கடை வைத்துள்ளார். கடந்த அக்டோபரில், 55 லட்சம் ரூபாயை, நண்பரின் வங்கிக் கணக்கில் செலுத்த பைக்கில் சென்றார். நரேஷ்குமாரை வழிமறித்த சிலர், போலீஸ் எனக் கூறி, அவர் வைத்திருந்த பணத்தை பறித்து தப்பினர். பூக்கடை போலீசார் வழக்கு பதிந்து, அன்பரசி உட்பட நால்வரை அக்டோபரில் கைது செய்தனர்.
வழக்கில் தலைமறைவாக இருந்த காரமடையை சேர்ந்த அன்வர்தீன், 39, செங்கல்பட்டை சேர்ந்த ரூபன் சக்ரவர்த்தி, 29, கோவையை சேர்ந்த பாவா, 30, ஆகிய மூவரையும், போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
பீர் பாட்டிலால் தாக்கிய வாலிபருக்கு 'காப்பு'
புளியந்தோப்பு: கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார், 24. கடந்த 13ம் தேதி, ஆடுதொட்டி அருகே சென்ற போது, எதிரே வந்த இருவர், மது போதையில் கீழே கிடந்த காலி பீர் பாட்டிலை எடுத்து, நவீன்குமாரை தாக்கினர். நவீன்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார்.
புளியந்தோப்பு போலீசார் வழக்கு பதிந்து, மோகன்ராஜ், 24, என்பவரை கைது செய்த போலீசார், தலைமறைவாக இருந்த நரேஷ்குமார், 26, என்பவரை, நேற்று கைது செய்தனர்.
ஜாமினில் வந்து ரகளை; ஓட்டேரியில் ரவுடி கைது
புளியந்தோப்பு: புளியந்தோப்பு, குருசாமி நகரைச் சேர்ந்தவர் கோதண்டம், 48. 'பி' பிரிவு ரவுடி. சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த இவர், பொது மக்களை அச்சுறுத்தி வருவதாக வந்த தகவலையடுத்து, பேசின்பாலம் போலீசார் அவரை நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
மாணவரை தாக்கிய இருவர் சிக்கினர்
ஜெ.ஜெ., நகர்: பாடி, குமரன் நகரை சேர்ந்தவர் முகமது நபில், 20; கல்லுாரி மாணவர். கடந்த 14ம் இரவு, ஜெ.ஜெ., நகர், கலைவாணர் நகர் பிரதான சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவருக்கு பின்னால் தொடர்ந்து ஒலி எழுப்பியபடி பைக்கில் வந்த மூவர், 'எங்களுக்கு வழிவிட மாட்டாயா' எனக்கேட்டு, முகமது நபிலிடம் வாக்குவாதம் செய்து, இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு தப்பினர். காயமடைந்த அவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜெ.ஜெ., நகர் போலீசார் வழக்கு பதிந்து, தாக்குதலில் ஈடுபட்ட, அம்பத்துாரைச் சேர்ந்த கணேஷ்குமார், 32, ம பாண்டு கமலேஷ், 24, இருவரையும் கைது செய்தனர்.

