
கஞ்சா கடத்திய
வாலிபர் கைது
அம்பத்துார்: பட்டரவாக்கம் ரயில் நிலையம் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த, அம்பத்துார் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், சந்தேகிக்கும் வகையில் சுற்றித்திரிந்த மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த அஸ்ரப், 29, என்பவரை, நேற்று கைது செய்தனர்.
அவரது உடைமையில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான ஏழு கிலோ கஞ்சா, 12 கஞ்சா சாக்லெட் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்து, அஸ்ரப்பை சிறையில் அடைத்தனர்.
அதேபோல், எண்ணுார் - அத்திப்பட்டு பாலமருகே, பொன்னேரி, அனுப்பம்பட்டைச் சேர்ந்த டேவிட், 29, மணலி சரத்குமார், 30, அப்பு, 27, ஆகிய மூன்று ரவுடிகளை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
வாலிபர் கொலையில்
மேலும் ஒருவர் கைது
அம்பத்துார்: மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த, அம்பத்துாரில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வந்த ராபின் பிரஷா, 35, என்பவர், தலையில் தாக்கப்பட்ட நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி, நேற்று அதிகாலை உயிரிழந்தார்.
கடந்த 14ம் தேதி இரவு நடந்த வீண் தகராறில், அதே பகுதியைச் சேர்ந்த தீனா, 19, அவரது மாமா கிரி, 27, ஆகியோர் இரும்பு ராடால் தாக்கியதில், ராபின் பிரஷா இறந்துள்ளார். போலீசார் ஏற்கனவே தீனாவை கைது செய்த நிலையில், கிரியை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வழிப்பறி செய்த
இருவர் கைது
புழல்: சென்னை துறை முகத்தில், லோடு ஏற்றிய கன்டெய்னர் லாரி, அலமாதி நோக்கி 9ம் தேதி சென்று கொண்டிருந்தது. புழல் சைக்கிள் ஷாப் பேருந்து நிறுத்தம் அருகே, அம்பத்துாரைச் சேர்ந்த வேல்முருகன், 24, விமல்குமார், 22, ஆகியோர் வழிமறித்தனர்.
ஓட்டுநர் சிவா, 24, என்பவரை தாக்கி அவரிடமிருந்து 1,000 ரூபாயை பறித்துச் சென்றனர். போலீசார், வழிப்பறி செய்த இருவரையும், நேற்று கைது செய்தனர்.

