
கார் ஓட்டுனருக்கு அரிவாள் வெட்டு
அபிராமபுரம்: அபிராமபுரம், விசாலாட்சி தோட்டத்தைச் சேர்ந்தவர் மவுலி, 23; கார் ஓட்டுநர். நேற்று காலை, இருசக்கர வாகனத்தில் மந்தைவெளி ரயில் நிலையம் அருகே சென்றார்.
மூன்று பேர் அவரை வழிமறித்து, மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, சரமாரியாக அவரை வெட்டி தப்பிச் சென்றனர்.
அபிராமபுரம் போலீசார், கார் ஓட்டுனர் மவுலியை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.
707 கிலோ கஞ்சா அழிப்பு
தாம்பரம்: தாம்பரம் போலீஸ் கமிஷனரக எல்லைகளில் நடத்தப்பட்ட பல்வேறு சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளில் கைப்பற்றப்பட்ட, 707 கிலோ கஞ்சா, செங்கல்பட்டு மாவட்டம், செங்குன்றம், தென்மேல்பாக்கத்தில் அமைந்துள்ள, ஜி.ஜே., மல்டிகிளேவ் நிறுவனத்தில் அழிக்கப்பட்டது.தாம்பரம் போலீஸ் கமிஷனரகத்தில், 2025, நவம்பர் மாதம் வரை, 3,054 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டுள்ளது.
மீன்களை திருடியவர் கைது
காசிமேடு: காசிமேடு, ஜி.எம்., பேட்டையைச் சேர்ந்த மாலதி, 46, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், மீன்களை மொத்தமாக வாங்கி சில்லரை விலைக்கு விற்பனை செய்கிறார்.
கடந்த, 16 ம் தேதி இரவு, காசிமேடில், 25,000 ரூபாய் மதிப்புள்ள வஞ்சிரம், கொடுவா, சீலா உள்ளிட்ட மீன்களை வாங்கி, ஐஸ் பெட்டியில் பதப்படுத்தி, வீட்டு வாசலில் வைத்திருந்தார். இம்மீன்களை திருடிய கொடுங்கையூர், எழில் நகரைச் சேர்ந்த நவீன், 22, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர். திருடிய மீன்களை விற்றதில் கிடைத்த பணத்தை செலவழித்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
மாமூல் வசூலித்த மூவர் சிக்கினர்
பள்ளிக்கரணை: பள்ளிக்கரணை, வேளச்சேரி - - தாம்பரம் சாலையில், நேற்று முன்தினம் இரவு, வடமாநில நபரிடம் பாணிபூரி சாப்பிட்ட மூன்று இளைஞர்கள், கத்தியை காட்டி மிரட்டி, 1,000 ரூபாய், மொபைல் போனை பறித்தனர். மேலும், சில கடைகளிலும் கத்திமுனையில் மாமூல் வசூலித்தனர்.
பள்ளிக்கரணை போலீசார், மாமூல் வசூலில் ஈடுபட்ட ஷாருக்கான், 20, மணிகந்தன், 19, மற்றும் முகேஷ், 18, ஆகிய மூவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிகரெட் தராததால் தம்பதி மீது தாக்குதல்
துரைப்பாக்கம்: கந்தன்சாவடி, செம்மண் நகரைச் சேர்ந்தவர் பாலமுருகன், 48; பெட்டி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம், கடைக்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த ராஜமுத்துகுமரன், 19, ரஞ்சித்குமார், 20, ஆகியோர், 'ஓசி'யில் சிகரெட் கேட்டனர்.
சிகரெட் தராததால், ஆத்திரமடைந்த இருவரும் சேர்ந்து, கல்லால் பாலமுருகனை தாக்கினர். தடுத்த அவரது மனைவி சின்னத்தாய் மீதும் தாக்குதல் நடத்தினர். போலீசார் விசாரித்து, இருவரையும் நேற்று கைது செய்தனர்.
ரூ.3 கோடி நில மோசடி: மேலும் இருவர் கைது
சென்னை: டில்லியில் வசிக்கும் விஸ்வநாதன் மகாதேவன், 58, அவரது தாய்மாமன் கணபதி ஆகியோருக்கு, கொளத்துாரில் 3 கோடி ரூபாய் மதிப்பிலான, 4,861 சதுரடி சொத்து உள்ளது. கணபதி இறந்ததை அறிந்த சிலர் போலியான ஆவணம் மூலம் அவரது சொத்தை அபகரித்துள்ளனர். இதையறிந்த விஸ்வநாதன் மகாதேவன், சென்னை போலீஸ் கமி ஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, நில மோசடியில் ஈடுபட்ட மூவரை ஏற்கனவே கைது செய்தனர்.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த சைதாப்பேட்டையைச் சேர்ந்த குமாரி, 42, அவரது சகோதரியான மேரி, 33, ஆகியோரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
சித்தப்பா மண்டையை உடைத்த மகன் கைது
தேனாம்பேட்டை: தேனாம்பேட்டை, நல்லான் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர், 47. இவருக்கும், அண்ணன் ரவீந்திரன் என்பவருக்கும், ஏற்கனவே சொத்து பிரச்னை உள்ளது.
இந்நிலையில் பாஸ்கர், அவரது வீட்டில் புதிதாக கட்டுமான பணியை மேற்கொண்டு வந்தார். இதையறிந்து அங்கு வந்த அவரது அண்ணன் மகன் பாலாஜி, 29, என்பவர், கட்டுமான பணி நடக்கும் வீட்டின் கதவு, மின் இணைப்பு பெட்டிகளை சேதப்படுத்தினார். மேலும், சித்தப்பாவின் மண்டையை கல்லால் தாக்கினார். தேனாம்பேட்டை போலீசார், பாலாஜியை நேற்று கைது செய்தனர்.
260 கிலோ குட்கா பறிமுதல்
மாதவரம்: மாதவரம் - புழல் செல்லும் வழியே நான்கு முனை சந்திப்பில், நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த மாதவரம் போக்குவரத்து போலீசார், தெலுங்கானா மாநிலத்தின் டி.எஸ்., 28, ஜி3534 என்ற பதிவு எண் கொண்ட மாருதி சுசுகி காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில், 260 கிலோ குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்தனர். கார் ஓட்டுநரும் உடன் இருந்தவரும் தப்பியோடினர். அவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
மொபைல் போன் வழிப்பறி செய்தவர் கைது
நந்தம்பாக்கம்: கேரளாவை சேர்ந்தவர் ஷாஜி, 49. இவர், ராமாபுரம், மைக்கேல் கார்டன் பகுதியில் தங்கி, கார் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். கடந்த 17ம் தேதி, ராமாபுரம் - மணப்பாக்கம் பிரதான சாலையில் நடந்து சென்றபோது, பைக்கில் வந்த மூவர், அவரிடம் இருந்து மொபைல் போனை பறித்து சென்றனர்.
புகாரின்படி விசாரித்த நந்தம்பாக்கம் போலீசார், சாலிகிராமத்தை சேர்ந்த தணிகாசலம், 19, என்பவரை கைது செய்து, மொபைல் போனை மீட்டனர்.
பசுவை சீண்டிய மர்ம நபர் மீது புகார்
பல்லாவரம்: பல்லாவரம், புதிய பெரிய பாளையத்தம்மன் கோவில் தெருவில், ஒரு பசு மா ட்டை மர்ம நபர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார்.
இதையறிந்த விலங்குகள் நல ஆர்வலர் விக்னேஷ், விலங்குகளுக்கு எதிராக துன்புறுத்தும் அந்நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்லாவரம் போலீசில் நேற்று புகார் அளித்துள்ளார். சா ட்சியாக, பசுவை துன்புறுத்தும் வீடியோவையும் அளித்துள்ளார்.

