
ஸ்கூட்டர் திருடன் கைது
பெரம்பூர்: அயனாவரத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர், 57. கடந்த 23ம் தேதி காலை தன் 'ஹோண்டா டியோ' ஸ்கூட்டரை, பெரம்பூர் சர்ச் வாசலில் நிறுத்தி, நண்பரின் வீட்டிற்கு சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது ஸ்கூட்டரை காணவில்லை. விசாரித்த செம்பியம் போலீசார், திருட்டில் ஈடுபட்ட சூளை பகுதியைச் சேர்ந்த முனியன், 36, என்பவரை நேற்று கைது செய்தனர்.
புழலில் 'புள்ளிங்கோ' அட்டகாசம்
புழல்: புழல், செகரட்டேரியட் காலனியில் 20க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. கடந்த சில மாதங்களாக ‛புள்ளிங்கோ' என அழைக்கப்படும் வாலிபர்கள் மற்றும் இளம் சிறார்களின் ரவுடியிசம் அதிகரித்துள்ளது. வீட்டு ஜன்னல்களில் கற்கள் வீசியும், பைக் ரேஸ் சென்றும் அட்டகாசத்தில் ஈடுபடும் இவர்களால், பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, போலீசார், அப்பகுதியில் தீவிர ரோந்து மேற்கொள்ள வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
வழிப்பறி திருடன் சிக்கினார்
மதுரவாயல்: மதுரவாயலில், கடந்த 2024ம் ஆண்டு நடந்த வழிப்பறி வழக்கில் பரணிபுத்துாரைச் சேர்ந்த வெங்கடேஷ், 28 என்பவர், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமினில் வெளியே வந்த வெங்கடேஷ், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். இதையடுத்து, கடந்த மாதம் 30ம் தேதி பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. விசாரித்த மதுரவாயல் போலீசார், வெங்கடேசனை நேற்று கைது செய்தனர்.
'போக்சோ' குற்றவாளி தற்கொலை
கொரட்டூர்: திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அருள், 19. கடந்த செப்டம்பர் மாதம் விருகம்பாக்கம் மகளிர் போலீசாரால், 'போக்சோ' வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சில நாட்களுக்கு முன், ஜாமினில் வெளிவந்த அவர், கொரட்டூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியபடி, மகளிர் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட்டு வந்தார். இந்நிலையில், மன உளைச்சலில் இருந்த அருள், நேற்று முன்தினம் இரவு படுக்கை அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கொரட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
தலைமறைவு குற்றவாளிக்கு 'காப்பு'
அரும்பாக்கம்: அரும்பாக்கம் போலீசார் போதை பொருள் விற்ற வழக்கில், கோயம்பேடு, சிவன் கோவில் தெருவைச் சேர்ந்த தினேஷ், 24, என்பவரை கடந்த ஜூலை மாதம் தேடி வந்தனர். இந்த நிலையில், போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி, கோயம்பேடில் பதுங்கியிருந்த தினேஷ், நேற்று கைது செய்யப்பட்டார்.
மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
மப்பேடு: அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சங்கர் கதாவார், 30, இவர், மப்பேடு ஊராட்சி வெள்ளகால்வாய் மேட்டுச்சேரி பகுதியில் த ங்கி, அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து வீட்டிற்கு வந்த சங்கர் கதாவார், வீட்டின் மாடிக்கு சென்றார். அப்போது, அங்கு தாழ்வாக சென்ற மின் கம்பியில் தவறுதலாக கை பட்டதில், மின்சாரம் பாய்ந்து து ாக்கி வீசப்பட்டார். திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார்.

