
கஞ்சா வழக்கில் தலைமறைவானவர் கைது
கோடம்பாக்கம்: கோடம்பாக்கம் காவல் நிலைய எல்லையில், கடந்த 2024ம் ஆண்டு கஞ்சா விற்பனை செய்த வழக்கில், அந்தோணிராஜ் என்பவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜாமினில் வெளியே வந்த அந்தோணிராஜ், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார். இதையடுத்து, அவரை கைது செய்ய, கடந்த 13ம் தேதி பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இதுகுறித்து விசாரித்த கோயம்பேடு போலீசார், கோடம்பாக்கத்தை சேர்ந்த அந்தோணிராஜ், 25, என்பவரை, நேற்று கைது செய்தனர்.
மொபைல் போன் பறிப்பு: இருவர் சிக்கினர்
கே.கே., நகர்: விருகம்பாக்கம் ஷேக் அப்துல் நகரை சேர்ந்தவர் ரவிக்குமார், 63. கடந்த 14ம் தேதி அதிகாலை, இருசக்கர வாகனத்தில் அஜந்தா பேருந்து நிறுத்தம் அருகே சென்றார். அப்போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், ரவிக்கு மார் பாக்கெட்டில் இருந்த மொபைல் போன் மற்றும் 7,000 ரூபாயை பறித்து சென்றனர்.
இதுகுறித்து, கே.கே., நகர் போலீசார் விசாரித்து, சின்னபோரூரை சேர்ந்த விக்னேஷ்குமார், 22, எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த மணிகண்டன், 19, ஆகிய இருவரை, நேற்று கைது செய்தனர்.
பணம் மோசடி: லேப் டெக்னீசியன் கைது
நீலாங்கரை: பனையூரை சேர்ந்தவர் கோகுல், 31. லேப் டெக்னீசியன். கொரோனா காலகட்டத்தில் மாநகராட்சியில் பணிபுரிந்தார். அப்போது உடன் பணிபுரிந்த பிரவீன்குமார், 36, அவரது மனைவி கலைவாணி, 32, ஆகியோரின் அறிமுகம் ஏற்பட்டது.
அப்போது, தொழிலில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என இருவரும் ஆசை வார்த்தைகள் கூறினர். இதை நம்பிய கோகுல், 2021ம் ஆண்டு 9 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.
ஆனால், பேசியபடி லாபம் கொடுக்கவில்லை. பணத்தை திருப்பி கேட்டபோது, 2 லட்சம் ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டு, 7 லட்சம் ரூபாயை தராமல் ஏமாற்றினர். புகாரின்படி, நீலாங்கரை போலீசார், பிரவீன்குமாரை நேற்று கைது செய்தனர். கலைவாணியை தேடுகின்றனர்.
கஞ்சா கடத்திய பெண் வியாபாரி சிக்கினார்
அண்ணா நகர்: பெரம்பூர் ரயில் நிலையத்தில் இருந்து பார்சலுடன் வெளியே வந்த பெண்ணை, அண்ணா நகர் மதுவிலக்கு போலீசார் நேற்று முன்தினம் இரவு கண்காணித்தனர். அப்பெண், ஆட்டோவில் ஏறி கோயம்பேட்டிற்கு வந்து , தஞ்சாவூர் செல்லும் பேருந்தில் ஏற முயன்றார்.
அவரை பிடித்து பார்சலை சோதனை செய்த போது, 8 கிலோ கஞ்சா இருந்தது. அவரை கைது செய்து நடத்திய விசாரணையில், தஞ்சாவூரைச் சேர்ந்த தனலட்சுமி, 55, என்பதும், கடந்தாண்டும் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு, ஏழு மாதம் சிறையில் இருந்ததும் தெரிந்தது.
மூதாட்டியிடம் மூன்று சவரன் வழிப்பறி
ஓட்டேரி: ஓட்டேரி, சுப்புராயன் தெருவைச் சேர்ந்தவர் செல்வி, 65. இவர், நேற்று முன்தினம் மாலை வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது, பைக்கில் பின்னால் வந்த நபர், மூதாட்டியிடம் பேச்சு கொடுத்தபடியே, அவர் அணிந்திருந்த மூன்று சவரன் தங்க நகையை பறித்து சென்றுள்ளார்.
வீட்டுக்கு சென்றதும், நகையை காணாமல் அதிர்ச்சி அடைந்த செல்வி, ஓட்டேரி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
கடையை வாடகைக்கு விடுவதாக கூறி மோசடி
ஆவடி: அம்பத்துாரைச் சேர்ந்த ரமேஷ், 32, ஆவடியில் பிரியாணி கடை நடத்த, ஓ.எல்.எக்ஸ்., இணையதளத்தில் கடை தேடி வந்தார். அப்போது, அண்ணா நகரைச் சேர்ந்த வித்யாராமன், 35, என்பவர் அறிமுகமாகி, ஆவடி, சி.டி.எச்., சாலையில் உள்ள கடையை வாடகைக்கு தருவதாக கூறி, 7 லட்சம் ரூபாய் அட்வான்ஸ் பெற்று ஒப்பந்தம் செய்துள்ளார்.
பின், 60,000 ரூபாய் செலவு செய்து, ரமேஷ் கடையை தயார் செய்த போது, கடையின் நிஜ உரிமையாளர் ஆறுமுகம் என்பவர் வந்து பணிகளை நிறுத்தியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த ரமேஷ், நேற்று அளித்த புகாரின்படி, ஆவடி போலீசார் விசாரிக்கின்றனர்.
ஆண்கள் விடுதியில் தீ விபத்து
செம்மஞ்சேரி: ஓ.எம்.ஆர்., குமரன் நகரில், கிளாடின் என்ற ஆண்கள் விடுதி உள்ளது. நேற்று மாலை, அங்குள்ள 'ஏசி'யில் திடீரென தீப்பிடித்தது. உடனே, அங்கு தங்கியிருந்த இளைஞர்கள் வெளியேறினர்.
தீ பரவி, அங்குள்ள மெத்தை உள்ளிட்ட பொருட்கள் கருகின. துரைப்பாக்கம் தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். செம்மஞ்சேரி போலீசார் விசாரணையில், மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது தெரிந்தது.
பைக் திருடிய இருவர் கைது
கோயம்பேடு: விருதுநகர் மாவட்டம், அருப்புகோட்டையை சேர்ந்த ஷா பாசில் இப்திகார், 28, சென்னையில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவர், கோயம்பேடு பேருந்து நிலையம் ஒன்றாவது நடைமேடை அருகே நிறுத்தியிருந்த தன் இருசக்கர வாகனத்தை காணவில்லை என, புகார் அளித்தார். போலீசார் விசாரித்து, அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ., சத்யா நகரைச் சேர்ந்த சதீஷ், 35, மற்றும் அசோக் நகரைச் சேர்ந்த அப்பு, 27, ஆகிய இருவரையும், நேற்று கைது செய்தனர். இவர்களிடம் இருந்து, ஐந்து மொபைல் போன், இருசக்கர வாகனம் மற்றும் லோடு வேன் பறிமுதல் செய்யப்பட்டது.
வாடிக்கையாளரை தாக்கிய கடை ஓனர்
போரூர்: போரூர், பாலமுருகன் நகரைச் சேர்ந்த தம்பதி அருண், 43, மற்றும் செல்வி, 40. இவர்கள், காரம்பாக்கம், ஆற்காடு சாலையில் உள்ள 'மாகனு' எலக்ட்ரிக் வாகன கடையில் 'பிளிஸ்' என்ற எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை 2024, ஜனவரியில் 95 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கினர்.
வாகனம், அடிக்கடி பழுதாவதும் அதை சரிசெய்வதும் தொடர்ந்து நடந்தது. அக்., 13ல் வாகனம் மீண்டும் பழுதானது. மாகனு கடையில் கொடுத்த நிலையில், வாகனத்தை பழுது நீக்கி தராமல், ஒரு மாதமாக அலையவிட்டுள்ளனர்.
இதுகுறித்து கேள்வி எழுப்பிய அருண், அவரது மனைவி செல்வி ஆகியோரை, கடை உரிமையாளர் கணேஷ், சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
காயமடைந்த இருவரும், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரவாயில் போலீசார், கணேஷ் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, நேற்று கைது செய்தனர்.

