
பணியின்போது போலீஸ்காரர் பலி
ஆவடி: திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்தவர் சந்தோஷ், 27. இவர், ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை ஐந்தாம் அணியில் போலீஸ்காரராக பணிபுரிந்தார். இவரது மனைவி வசந்தி, 20. நேற்று காலை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் பாதுகாப்பு பணிக்கு செல்வதற்கு, திருமுல்லைவாயிலில் நடந்த காவலர் அணிவகுப்பில் சந்தோஷ் பங்கேற்றார்.
அப்போது நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது; அங்கிருந்து, ஆவடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற சிறிது நேரத்திலேயே சந்தோஷ் உயிரிழந்தார். திருமுல்லைவாயில் போலீசார் விசாரிக்கின்றனர்.
வீடு புகுந்து திருடியவர் சிக்கினார்
மாங்காடு: மாங்காடு அருகே மலையம்பாக்கம், பாரிகார்டன் பகுதியைச் சேர்ந்தவர் அன்வர் பாட்ஷா, 50. இறைச்சி கடைக்காரர். கடந்த 16ம் தேதி, இவரது வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், 30 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
இது குறித்து விசாரித்த மாங்காடு போலீசார், திருட்டில் ஈடுபட்ட கோயம்பேடைச் சேர்ந்த விக்கி, 25, என்பவரை கடந்த 25ம் தேதி போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த சூர்யா என்பவரை நேற்று கைது செய்து நகைகளை மீட்டனர்.
கோவிலில் திருடிய 3 பேர் கைது
விருகம்பாக்கம்: விருகம்பாக்கம், ஆற்காடு சாலையில் உள்ள விநாயகர் கோவிலில், கடந்த மாதம் உண்டியல் உடைக்கப்பட்டு, அதிலிருந்த பணம் திருடப்பட்டது.
இது குறித்து விசாரித்த விருகம்பாக்கம் போலீசார், திருட்டில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சன், 20, மற்றும் இரண்டு சிறுவர்களை நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர்கள் ஏற்கனவே , அதே பகுதியில் உள்ள மற்றொரு விநாயகர் கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை ருடியதும் தெரியவந்தது.
எல்லையில் ராணுவ வீரர் பலி
திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியத்தைச் சேர்ந்த சக்திவேல், 30, இந்திய ராணுவத்தில் 2018ல் இருந்து பணியாற்றி வந்தார். காஷ்மீர் எல்லைப் பகுதியில், சக்திவேல் நேற்று, பாதுகாப்பு பணியில் இருந்தபோது, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும்போது, குண்டடிப்பட்டு சக்திவேல் உயிரிழந்தார்.
அவரது உடல் இன்று, தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்படவுள்ளது. அங்கிருந்து அரசு மரியாதையுடன், தனி வாகனம் மூலம் சொந்த கிராமத்திற்கு கொண்டு வந்து அஞ்சலி செலுத்தப்படுகிறது. சக்திவேலுக்கு, தேவஸ்ரீ, 26 என்ற மனைவியும், ஆஷிகா செர்லின், 4 என்ற மகளும், லெனின் அக்ரன், 2 என்ற மகனும் உள்ளனர்.
விபத்து பலி 4 ஆக உயர்வு
புதுப்பட்டினம்: கூவத்துார் அடுத்த, கீழார்கொல்லை பகுதியைச் சேர்ந்த 20 பெண்கள், கடந்த 1ம் தேதி, கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கம் பகுதியில் இயங்கும் தனியார் எக்ஸ்போர்ட் நிறுவன பணிக்கு, வேனில் சென்றனர்.
கல்பாக்கம் அடுத்த குன்னத்துாரில், புதுச்சேரி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும், வேனும் நேருக்குநேர் மோதியதில் பானுமதி, 40, உமா, 35, ஆகியோர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றவர்கள், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஜெயலட்சுமி, 47, வேன் ஓட்டுநர் சங்கர், 32, ஆகியோர், நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தனர்.

