
மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
அமைந்தகரை: சிவகங்கை மாவட்டம், வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த கவரேஷ், 18, அமைந்தகரை அடுத்த கிழக்கு ஷெனாய் நகரில் தனியார் 'வாட்டர் வாஷ்' கடையில் பணிபுரிந்தார்.
இங்கு, நேற்று முன்தினம் நள்ளிரவு, மாநகராட்சிக்கு சொந்தமான 'டாடா ஏஸ்' வாகனங்களுக்கு, ஒப்பந்த அடிப்படையில் 'வாட்டர் வாஷ்' செய்யும் பணி நடந்தது. இதில் ஈடுபட்ட கவரேஷ், வாட்டர் வாஷ் செய்யும்போது மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்தார்.
நகை திருடிய ஊழியர்கள் கைது
பாண்டிபஜார்: தி.நகர், வடக்கு உஸ்மான் சாலையில், பழைய தங்க நகைகள் வாங்கும் நிறுவனத்தில் மேலாளர் கார்த்திக் ஸ்ரீ ராமச்சந்திரன், 45, கடந்த மாதம் நிறுவனத்தின் கணக்குகளை சரிபார்த்தார்.
அதில் முறைகேடு நடந்ததை அறிந்து பாண்டிபஜார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில், வாடிக்கையாளர்களிடம் வாங்கும் தங்க நகைகளை சிறுக சிறுக துண்டித்து, 10 சவரன் நகைகளை திருடியது தெரிந்தது. இதில் ஈடுபட்ட வளசரவாக்கத்தைச் சேர்ந்த பிரவீன்குமார், 29, ஜாபர்கான்பேட்டை யுவராஜ், 30, இருவரையும் கைது செய்து, 22.6 கிராம் தங்கம், 58,000 ரூபாயும் பறிமுதல் செய்தனர். மற்றொரு ஊழியரான செல்வதிருமணி கண்ணன் என்பவரை தேடி வருகின்றனர்.
அழுகிய ஆண் சடலம் மீட்பு
கோயம்பேடு: கோயம்பேடு காவல் எல்லையான, ஆழ்வார் திருநகர், பெரியார் நகர், அண்ணா சாலையில், யாரும் வசிக்காத பயன்பாட்டில் இல்லாத வீட்டில் இருந்து நேற்று முன்தினம் இரவு, கடும் துர்நாற்றம் வீசியது.
வீட்டு உரிமையாளரின் நண்பர் சதீஷ் என்பவர், வெளி கேட் மீது ஏறி, உள்ளே சென்று பார்த்தார். அங்கு, நயிலான் கயிற்றில் துாக்கில் தொங்கியபடி அழுகிய நிலையில் ஒருவர் இருப்பது தெரிந்தது.
கோயம்பேடு போலீசார், உடலை மீட்ட பின் விசாரித்ததில், அதேபகுதியில் சாலையோரத்தில் யாசகம் பெற்று வந்த பிரசாத், 47, என்பதும், நான்கு நாட்களுக்கு முன் துாக்கிட்டு தற்கொலை செய்ததும் தெரிந்தது.
ஒரே இரவில் 9 கடைகளில் திருட்டு
திருப்போரூர்: செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த வெங்கூர் கிராமத்தில், ஏராளமான வணிக கடைகள், திருமண மண்டபம், வீடுகள் உள்ளன.
நேற்று காலை, கடையை திறக்க வந்த உரிமையாளர்கள் பர்னிச்சர் கடை, சூப்பர் மார்க்கெட், சிக்கன் இறைச்சி கடை, காய்கறி கடை, பழக்கடை, உணவகம் என, ஒன்பது கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு திருட்டு நடந்தது தெரிந்தது.
ஒவ்வொரு கடைகளிலும் 1,000 ரூபாய் முதல் 7,000 ரூபாய் திருடுபோனது தெரிந்தது. திருப்போரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

