
ரூ.1.50 லட்சம் கஞ்சா பறிமுதல்
அம்பத்துார்: அம்பத்துார், மேனாம்பேடு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட, அதே பகுதியைச் சேர்ந்த நரேஷ் குமார், 26, சுரேஷ், 25, ஆகியோரை போலீசார் கைது செய்து, 1.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.
நில மோசடி செய்த இருவருக்கு 'காப்பு'
தாம்பரம்: மடிப்பாக்கம் அடுத்த நன்மங்கலம் கிராமத்தில் யசோதா என்பவருக்கு சொந்தமான, 2,880 சதுர அடி நிலத்தை, அதே பகுதியை சேர்ந்த சாம்பசிவம், 74, என்பவர், போலி ஆவணங்கள் வாயிலாக தன் மனைவியின் பெயருக்கு மாற்றி உபயோகித்து வந்தார்.
யசோதாவின் மகன் வெங்கடேஸ்வரன் அளித்த புகாரை அடுத்து, தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு போலீசார், போலி ஆவணம் தயாரித்து நில மோசடி செய்த சாம்பசிவம், அவருக்கு உடந்தையாக இருந்த ராமச்சந்திரன் ஆகிய இருவரை, நேற்று கைது செய்தனர்.
மாஞ்சா நுாலால் முதியவர் காயம்
கொடுங்கையூர்: கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் பிரகாஷ் ஜெயின், 67; மாதவரத்தில் உள்ள ரெக்சின் கம்பெனியில், பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று, மூலக்கடை மேம்பாலம் வழியாக, இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றபோது, எங்கிருந்தோ பறந்துவந்த மாஞ்சா நுால் அறுத்து , அவரது கீழ் உதட்டில் காயம் ஏற்பட்டது. கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
ஓட்டுநரின் போனை திருடியவர் கைது
சிந்தாதிரிப்பேட்டை: கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் சலீம், 48; சரக்கு வாகன ஓட்டுநர். கடந்த, 2ம் தேதி, சிந்தாதிரிப்பேட்டை, புதிய மீன் சந்தையில் சரக்கு இறக்கி, வாகனத்தை சாலையோரம் நிறுத்தி துாங்கியபோது, அவரது மொபைல் போன் திருடுபோனது.
சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரித்து, மொபைல் போன் திருடிய பெரும்பாக்கத்தைச் சேர்ந்த சதீஷ், 21, என்பவரை கைது செய்தனர்.

