
சிலிண்டர் வெடித்து குடிசை தீக்கிரை
ஆவடி: ஆவடி, கரிமேடு, காமராஜ் நகரைச் சேர்ந்தவர் பிரசன்னா, 36. நேற்று காலை, இவரது குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து வந்த ஆவடி தீயணைப்பு நிலைய வீரர்கள், 30 நிமிடம் போராடி, தீயை அணைத்தனர்.
எனினும், வீட்டிலிருந்த பொருட்கள் மற்றும் வாசலில் நின்றிருந்த, டி.வி.எஸ்., - எக்ஸ்.எல்., மொபட் உள்ளிட்டவை தீயில் எரிந்து நாசமாகின.
முத்தாபுதுப்பேட்டை போலீசார் விசாரித்ததில், வீட்டிலிருந்த விளக்கு கீழே விழுந்து, அதன் மூலம், அங்கிருந்த காஸ் சிலிண்டர் வெடித்து, தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
வழிப்பறி செய்த ஐந்து பேர் கைது
எம்.கே.பி.நகர்: வியாசர்பாடி, பி.வி.காலனியில் மர்ம நபர்கள் சிலர், கஞ்சா போதையில் பொதுமக்களை கத்தி முனையில் மிரட்டி, வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர்.
தகவலறிந்த எம்.கே.பி.நகர் போலீசார், வியாசர்பாடி, எம்.கே.பி.நகரைச் சேர்ந்த கார்த்திக், 23, சஞ்சய், 24, தீனா, 18, பிரசாந்த், 32, சார்லஸ், 24, ஆகிய ஐந்து பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்த 15 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
சாட்சியை மிரட்டிய குற்றவாளி கைது
புளியந்தோப்பு: புளியந்தோப்பு, கே.பி.பார்க் பகுதியைச் சேர்ந்தவர் அன்புக்கரசி, 65; பெட்டிக்கடை நடத்தி வருகிறார். கடந்த, 2024 ஜன., 12ம் தேதி இரவு, இவரது கடை அருகே, அதே பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவரை, ராஜா, 39, என்ற ரவுடி கட்டையால் அடித்து கொலை செய்தார். இதுகுறித்த வழக்கில் சாட்சியாக அன்புக்கரசி சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில், கடந்த வாரம் இவரது கடைக்கு வந்த ராஜா, அன்புக்கரசிக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றார். பேசின் பாலம் போலீசார், ரவுடி ராஜாவை, நேற்று கைது செய்தனர்.
பைக் திருடிய மூன்று பேர் கைது
வானகரம்: அய்யப்பன்தாங்கல், பிரசன்னா நகரைச் சேர்ந்தவர் அஸ்வின், 23. இவரது 'யமஹா' இருசக்கர வாகனம் கடந்த 2ம் தேதி திருடு போனது. வானகரத்தை சேர்ந்த தயாளன், 49, என்பவரின் இருசக்கர வாகனமும், கடந்த 10ம் தேதி திருடப்பட்டது.
வானகரம் போலீசார் விசாரித்து, நொளம்பூர் யூனியன் சாலையை சேர்ந்த சுனில், 23; சின்ன நொளம்பூரை சேர்ந்த சிலம்பரசன், 26, ஹானஸ்ட் ராஜ், 20 ஆகிய மூவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஐந்து பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பாட்டியை தாக்கிய பேரன் கைது
வியாசர்பாடி: வியாசர்பாடி, சுந்தரம் பவர் லைனை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி, 86. கணவர் இறந்த நிலையில், தனியாக வசித்து வருகிறார்.
கிருஷ்ணவேணியின் எதிர் வீட்டில், அவரது தங்கை மகன் முருகன், மருமகள் ரஞ்சனி, அவர்களது 15 வயது மகன், மகள்களுடன் வசிக்கிறார்.
குடிப்பழக்கத்திற்கு அடிமையான, 15 வயது சிறுவன், அவரது பெற்றோரை நேற்று தகாத வார்த்தையால் திட்டி தாக்கியுள்ளார். இதை பார்த்த கிருஷ்ணவேணி, தட்டி கேட்டார். ஆத்திரமடைந்த சிறுவன், மரப்பலகையால், பாட்டியின் தலையில் தாக்கி தப்பினார். வியாசர்பாடி போலீசார், 15 வயது சிறுவனை கைது செய்து, சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.
வர்த்தக மோசடியில் மேலும் ஒருவர் கைது
சென்னை: பெருங்குடியைச் சேர்ந்தவர் கார்த்திக், 36. கடந்த ஆண்டு 'ஆன்லைன்' வர்த்தக முதலீட்டு ஆசையில், 1.43 கோடி ரூபாயை இழந்தார். சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, மோசடி செய்த நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த சூர்யா ஸ்ரீனிவாஸ், 50, உட்பட எட்டு பேரை கைது செய்தனர்.
இந்நிலையில், மோசடி பணத்தை பலரின் வங்கி கணக்குகளுக்கு மாற்றி, மோசடிக்கு உடந்தையாக இருந்த, முகமது ஜைனுாதீன், 26, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்து, மூன்று மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வியாபாரியிடம் வழிப்பறி: வாலிபர் கைது
சென்னை: புரசைவாக்கம், சுந்தரம் தெருவைச் சேர்ந்தவர் ஹர்ஷாத், 23; பானிபூரி வியாபாரி. இவர் நேற்று முன்தினம் காலை, வேப்பேரி அவதான பாப்பையா சாலை வழியாக நடந்து சென்றார். அப்போது மர்ம நபர் ஒருவர், அவரை வழிமறித்து கத்தி முனையில், 1,500 ரூபாயை பறித்துச் சென்றார். வேப்பேரி போலீசார் விசாரித்து, சூளைமேடைச் சேர்ந்த கிஷோர்குமார், 33, என்பவரை கைது செய்தனர்.
கஞ்சா விற்ற 2 பேருக்கு 'காப்பு'
ஓட்டேரி: ஓட்டேரி மங்களபுரம் பகுதியில், ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்த மூவரில் இருவர் தப்பியோடினர். விசாரணையில் அவர், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணா, 38, என்பதும், ஒடிசாவில் இருந்து தன் நண்பர்களான தேவா, மகேந்தர் ஆகியோருடன் ஏழு கிலோ கஞ்சாவை வாங்கி சென்ட்ரலில் கைமாற்றி விடுவதற்காக வந்ததும் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர். அவரிடம் இருந்து 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் திரு.வி.க., நகரில் கஞ்சா விற்ற, முகமது உசேன், 37, என்பவரை புளியந்தோப்பு போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சிறுமியிடம் அத்துமீறிய முதியவருக்கு வலை
கொருக்குப்பேட்டை: கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த 9 வயது சிறுமி, கடந்த மாதம் வீட்டில் தனியாக இருந்துள்ளார். வீட்டின் உரிமையாளர் சோமசுந்தரம், 60, சாக்லேட் கொடுத்து, சிறுமியிடம் அத்துமீறியுள்ளார்.
இதுகுறித்து நேற்று முன்தினம் அளித்த புகாரை அடுத்து, தண்டையார்பேட்டை மகளிர் போலீசார், 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, தலைமறைவான வீட்டின் உரிமையாளரை தேடி வருகின்றனர்.

