லாரியில் தீ: 8,500 லிட்டர் பால் வீண்
படப்பை: காஞ்சிபுரம், வெள்ளகேட் பகுதியில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் இருந்து 8,500 லிட்டர் பால், 1,000 லிட்டர் தயிர் ஏற்றிய கன்டெய்னர் லாரி, சென்னையை நோக்கி நேற்று சென்றது.
ஸ்ரீபெரும்புதுார் - மணிமங்கலம் சாலையில், பாரதி நகர் அருகே, லாரி தீ பற்றி எரிந்தது. ஓட்டுநர் லோகநாதன், 40, தப்பினார். லாரி முன்பகுதி முழுதும் எரிந்து நாசமானது. தீ வெப்பத்தால், பால், தயிர் நாசமானது.
பெண்கள் விடுதியில் திருட்டு
செம்மஞ்சேரி: செம்மஞ்சேரி, கருணாநிதி தெருவில், வேங்கம்பா என்ற பெண்கள் விடுதி உள்ளது. நேற்று முன்தினம் மதியம், 30 வயது மதிக்கத்தக்க ஆண், விடுதிக்குள் புகுந்து, இரண்டு பையை திருடி சென்றார்.
அதில், இரு பெண்களின் இரண்டு லேப்டாப், ஒரு மொபைல் போன் மற்றும் 4,500 ரூபாய் இருந்தது. பெண்கள் மற்றும் விடுதி நிர்வாகம் அளித்த புகாரின்படி, செம்மஞ்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

