ADDED : மார் 18, 2026 05:15 AM
கார் கண்ணாடிகளை உடைத்தவர் கைது
ஆவடி: ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் முகமது சம்சுதீன், 37, மற்றும் மொய்தீன், 39. இருவரும், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
நேற்று அ திகாலை, தொழுகை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த இருவரிடமும், மது போதையில் இருந்த நபர் ஒருவர், வீண் தகராறில் ஈடுபட்டார். பின், ஆத்திரமடைந்த அந்த நபர், சாலையில் நிறுத்தி இருந்த, 'ஹூண்டாய் ஐ10' மற்றும் 'டொயோட்டா அர்பன் க்ரூஸர்' கார்களின் முன் பக்க கண்ணாடியை உடைத்து தப்பினார்.
இது குறித்து விசாரித்த ஆவடி போலீசார், கார் கண்ணாடியை உடைத்த, ஆவடி கொள்ளுமேடு பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன், 26, என்பவரை, நேற்று கைது செய்தனர்.
வழிப்பறி ரவுடிகள் 5 பேர் சிக்கினர்
புளியந்தோப்பு: புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியில், கடந்த 8ம் தேதி, கத்தியுடன் வலம் வந்த ரவுடிகளான புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்த முகேஷ், 19, அஜய், 20, ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த, புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த ராகுல் என்ற பிரவீன்குமார், 19, என்ற நபரை, புளியந்தோப்பு போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதேபோல், கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய நாராயணசாமி தெருவைச் சேர்ந்த வெள்ளை என்கின்ற பெரோஸ், 38, செல்லமுத்து, 43, சேஷாத்திரி, 35, மற்றும் தீனா என்கின்ற தினகரன், 42, ஆகிய நால்வரை, புளியந்தோப்பு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இறுதி ஊர்வலத்தில் ஊழியரை தாக்கியோர் கைது
சென்னை: ராயப்பேட்டை, ரோட்டரி நகர், 15வது தெருவைச் சேர்ந்தவர் ஜீவா, 21; உணவு டெலிவரி ஊழியர். கடந்த, 15ம் தேதி, வீட்டிற்கு அருகே உறவுக்கார பெண்ணின் இறுதி ஊர்வலத்தில் நடனமாடிச் சென்றார்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த இருவர், வீண் தகராறு செய்துள்ளனர். மேலும், அன்றைய தினம் இரவு, ஆர்.கே., சாலையில் உள்ள டீக்கடையில் அமர்ந்து இருந்த ஜீவாவை, தகாத வார்த்தையால் பேசி, இரும்பு கம்பியால் தாக்கி தப்பினர்.
இதில் காயமடைந்த அவர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின், அவர் கொடுத்த புகாரின்படி, ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்ட, மணிகண்டன், 25, ஆனந்த், 30, ஆகிய இருவரை, நேற்று கைது செய்தனர் .
நண்பரிடம் கைவரிசை காட்டியவருக்கு 'காப்பு'
சென்னை: ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் கிஷோர், 35. கடந்த, 15ம் தேதி, நண்பர்களுடன் அரசு மாநகரப் பேருந்தில், மெரினாவிற்கு சென்றார். அங்கு, அவரது மொபைல்போன் காணாமல் போனது.
இதுகுறித்து, அவர் அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி விசாரித்த போலீசார், மொபைல் போனை திருடிய கிஷோரின் நண்பரான, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த தசரதன், 27, என்பவரை கைது செய்தனர்.
வாலிபரை கம்பியால் தாக்கியவர் கைது
கோயம்பேடு: பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த மிதிலேஷ்குமார் மஹதே, 23. இவர், கோயம்பேடு காளியம்மன் கோவில் தெருவில், முருகன் என்பவரின் வீட்டில் தங்கி, பெயின்டிங் வேலை செய்து வருகிறார்.
கடந்த 15ம் தேதி இரவு, மிதிலேஷ்குமார் மஹதே மற்றும் பக்கத்து அறையில் தங்கியிருந்த உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விஷாணு சாஹன் ஆகியோருக்கு இடையே, குப்பை கொட்டுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த விஷாணு சாஹன், அருகில் இருந்த இரும்புக் கம்பியால், மிதிலேஷ்குமார் மஹதேவை தாக்கினார். இதில் காயமடைந்த அவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
புகாரின்படி, விஷாணு சாஹனை கோயம்பேடு போலீசார் கைது செய்தனர்.
பணம் வைத்து சூதாடிய 20 பேருக்கு 'கம்பி'
அம்பத்துார்: அம்பத்துார், அத்திப்பட்டு பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், வெளியாட்கள் சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக, அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசாருக்கு, நேற்று முன்தினம் நள்ளிரவு தகவல் கிடைத்தது.
அதன்படி, அங்கு சென்ற, 30க்கும் மேற்பட்ட போலீசார், குடியிருப்பின் 9வது பிளாக்கை சுற்றி வளைத்தனர். அப்போது, 18வது மாடியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட, 20 பேரை மடக்கி பிடித்து, கைது செய்தனர்.
பின், அனைவரையும் ஜாமினில், நேற்று காலை விடுவித்தனர். அவர்களிடம் இருந்து, 85,000 ரூபாய் மற்றும் சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர்.
ஆவடி பெண் சந்தேக மரணம்
ஆவடி: ஆவடி காந்தி நகர், எம்.ஜி.ஆர்., தெருவைச் சேர்ந்தவர் ராதிகா, 37; கூலித் தொழிலாளி. இவருக்கு, ஒரு மகளும், இரண்டு மகனும் உள்ளனர்.
கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன், இவரது கணவர் இறந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த இவரது உறவினர் மணி, 25, என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. நேற்று மதியம், ராதிகா வீட்டில் இருவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ராதிகா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு, ஆவடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
அங்கு, மருத்துவ பரிசோதனையில், அவர் இறந்தது தெரிந்தது. மேலும், ராதிகாவின் கழுத்தில் நகக்கீறல்கள் இருப்பதால், சந்தேக மரணம் என, வழக்கு பதிந்த ஆவடி போலீசார், ராதிகாவின் உடலை கைப்பற்றி, கள்ளக்காதலன் மணியை கைது செய்து விசாரிக்கின்றனர்.
