ADDED : மார் 24, 2026 09:03 PM
பைக் திருடிய இருவர் சிக்கினர்
குமரன் நகர்: சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையை சேர்ந்தவர் குலசேகரன், 69; தனியார் நிறுவன ஊழியர். கடந்த 21ம் தேதி, இவரது இருசக்கர வாகனம் திருடுபோனது.
குமரன் நகர் போலீசார் விசாரித்து, பைக் திருட்டில் ஈடுபட்ட எழும்பூரை சேர்ந்த ஆகாஷ், 20, ஓட்டேரியை சேர்ந்த பீட்டர், 23, ஆகிய இருவரை நேற்று கைது செய்தனர். இவர்களிடம் இருந்து பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
வீடு புகுந்து திருடியவர் கைது
பேசின்பாலம்: புளியந்தோப்பு, கே.பி.பார்க் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயகுமார், 34. இவரது மனைவி, அவரது தாய் வீட்டுக்கு சென்ற நிலையில், வீட்டில் ஜெயகுமாரும், அவரது தந்தையும் இருந்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு, ஜெயகுமார் வெளியே சென்றபோது, வீட்டின் கதவை சார்த்தி விட்டு சென்றுள்ளார். வீட்டினுள் ஜெயகுமாரின் தந்தை சிவலிங்கம் துாங்கிக் கொண்டிருந்தார்.
நள்ளிரவு வீடு திரும்பிய ஜெயகுமார், வீட்டில் இருந்த மூன்று மொபைல் போன், மருந்தக கலெக்சன் பணம் 19,000 ரூபாய் திருடு போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பேசின்பாலம் போலீசார் விசாரித்து, வீடு புகுந்து திருடிய, புளியந்தோப்பைச் சேர்ந்த ராகுல், 20, என்பவரை கைது செய்தனர்.
பைக்கிலிருந்து விழுந்த வாலிபர் காயம்
வியாசர்பாடி: வியாசர்பாடி, பொன்னியம்மன்மேடு பகுதியைச் சேர்ந்தவர் தீபக், 22. இவர், வியாசர்பாடி புதிய மேம்பாலம் அருகே, கே.டி.எம்., பைக்கில் வந்த போது, கட்டுப்பாட்டை இழந்து தவறி கீழே விழுந்தார்.
படுகாயமடைந்த தீபக்கை, அங்கிருந்தோர் மீட்டு, கொடுங்கையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்திற்குள்ளான கே.டி.எம்., பைக் தீ பிடித்து எரிந்து நாசமானது. வியாசர்பாடி போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.
