கிரைம் கார்னர்: சிறுவர்களை மதுவாங்க சொன்ன தகராறில் ஒருவருக்கு வெட்டு
கிரைம் கார்னர்: சிறுவர்களை மதுவாங்க சொன்ன தகராறில் ஒருவருக்கு வெட்டு
UPDATED : ஏப் 28, 2026 08:35 PM
ADDED : ஏப் 28, 2026 07:51 PM
ஆவடி: ஆவடி, கவுரிப்பேட்டையைச் சேர்ந்தவர்கள் சார்லி, 41 மற்றும் சரவணன், 40. இருவரும் பூமாலை கட்டும் தொழில் செய்து வருகின்றனர். இருவரும், கடந்த 26ம் தேதி மது போதையில் கம்பர் தெரு அருகே நின்றிருந்தனர். அங்கு வீட்டு வாசலில் நின்றிருந்த சிறுவர்களை, மது வாங்கி வரும்படி சரவணன் வற்புறுத்தி உள்ளார். இதை சார்லி தடுத்துள்ளார். ஆத்திரமடைந்த சரவணன் பிளேடால் சார்லியின் இடது முழங்கை, மார்பில் கிழித்துள்ளார். அங்கிருந்தவர்கள் சார்லியை மீட்டு, ஆவடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். விசாரித்த ஆவடி போலீசார், சரவணனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
***
புரோகிதரிடம் மொபைல் போன்
பறித்த இளைஞர்கள் பிடிபட்டனர்
புழல்: மடிப்பாக்கம், அம்பேத்கர் சாலையைச் சேர்ந்தவர் கணேசன், 56; புரோகிதர். இவர், கடந்த 19ம் தேதி, புழல், கதிர்வேடு பகுதியில் உள்ள மண்டபத்தில் வேலை முடித்து, மண்டபத்தின் வெளியே வீட்டுக்கு செல்ல காத்திருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் இருவர், கணேசனின் மொபைல் போனை பறித்து தப்பினார். இது குறித்து விசாரித்த புழல் போலீசார், புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த சந்தோஷ், 19, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பரத், 21, ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொபைல் போன் மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய 'ஹோண்டா டியோ' ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
***
3 கிலோ கஞ்சாவுடன்
செங்குன்றம் வாலிபர் கைது
புழல்: புழல், காவாங்கரை ஏரிக்கரை சந்திப்பு அருகே புழல் போலீசார் நேற்று காலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை பிடித்து சோதனை செய்தனர். அவரது பையில் மூன்று கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. விசாரணையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது செங்குன்றத்தைச் சேர்ந்த விமல்நாதன், 30, என தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். விமல் மீது, பெட்ரோல் குண்டு மற்றும் துப்பாக்கி வைத்திருந்ததாக இரண்டு வழக்குகள் ஏற்கனவே உள்ளன.
***
புளியந்தோப்பில் டீக்கடை
ஷட்டர் உடைத்து திருட்டு
பேசின் பாலம்: புளியந்தோப்பு, கிருஷ்ணபிள்ளை தெருவைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில், 52. இவர், புளியந்தோப்பு, கே.பி.பார்க், 8வது பிளாக் அருகே நான்கு ஆண்டுகளாக டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று காலை கடையை திறக்க சென்றபோது, கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, கல்லாவில் வைத்திருந்த 6,000 ரூபாய் திருடு போனது தெரிந்தது. இது குறித்து பேசின் பாலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
***
ஓமந்துாரார் மெட்ரோ நிலையத்தில்
வழிப்பறியில் ஈடுபட்ட மூவர் கைது
சிந்தாதிரிப்பேட்டை: சேப்பாக்கம் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் வசித்து வருபவர் ஜித்தேந்திரகுமார், 36. இவர் தனியார் நிறுவனம் மூலம் பாலம் கட்டுமான பணி மேற்கொண்டு வருபவர். கடந்த 19ம் தேதி மாலை, ஓமந்துாரார் அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே நடந்து சென்றார். அப்போது, ஆட்டோவில் வந்த மூவர் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, 2 கிராம் தங்க நகையும், 600 ரூபாயும் பறித்துச் சென்றனர். விசாரித்த சிந்தாதிரிப்பேட்டை போலீசார் கே.கே.நகரைச் சேர்ந்த சந்துரு, 20, சசிமுத்து, 25, தனுஷ், 18 ஆகியோரை கைது செய்து கத்தி, ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
***
குடும்ப தகராறில்
பீஹார் பெண் தற்கொலை
பல்லாவரம்: பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் தாகூர். இவரது மனைவி குஷ்னம்மா, 18. இவர்களுக்கு, 6 மாத பெண் குழந்தை உள்ளது.
இவர்கள், பல்லாவரம், பெரிய பாளையத்தம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தனர். தாகூர் வேளச்சேரியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில், 'ஏசி' மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குஷ்னம்மா சாப்பிடாமல் இருந்ததால், தாகூர் கோபித்துக்கொண்டு நேற்று காலை வேலைக்கு சென்று விட்டார். இந்த நிலையில், குஷ்னம்மாவின் சகோதரர், தாகூருக்கு போன் செய்து, வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். வீட்டிற்கு சென்று பார்த்த போது, குஷ்னம்மா துாக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். தாம்பரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில் குஷ்னம்மா இறந்தது தெரியவந்தது. பல்லாவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
