ADDED : ஜூன் 16, 2026 10:47 PM

ஆட்டோ மோதி போலீஸ்காரர் காயம்
குரோம்பேட்டை: கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மணிகண்டன், 31. குரோம்பேட்டை காவல் நிலையத்தில் முதல் நிலை போலீஸ்காரர்.
நேற்று முன்தினம் இரவு, குரோம்பேட்டை எம்.ஐ.டி., மேம்பாலத்தின் கீழ், இருசக்கர வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அணுகு சாலையில் இருந்து வந்த ஆட்டோ, அவர் மீது மோதியது.
இதில், போலீஸ்காரர் மணிகண்டனின் வலது கையில் காயம் ஏற்பட்டது. அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார், ஆட்டோ ஓட்டுநரான அஸ்தினாபுரத்தைச் சேர்ந்த சுரேஷ், 25, என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.
போதை பொருள் விற்ற நபர் கைது
யானைகவுனி: சவுகார்பேட்டை, மின்ட் தெருவில் சந்தேகிக்கும் வகையில் சுற்றித்திரிந்த, ராஜஸ்தானைச் சேர்ந்த ஜீவாராம், 42, என்பவரை, யானைகவுனி போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். அவரிடம் இருந்து 60,000 ரூபாய் மதிப்புள்ள, 600 கிராம் 'ஓப்பியம்' எனும் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. ராஜஸ்தான் மாநிலம், ஜலோர் மாவட்டத்தில் இருந்து வாங்கி வந்து, சென்னையில் விற்றது தெரியவந்தது.
நள்ளிரவில் கார் தீக்கிரை
பல்லாவரம்: திருச்சியைச் சேர்ந்த ஷர்மிளா, உறவினரை பார்க்க, குடும்பத்தினருடன் 'மஹிந்திரா ஷைலோ' வாடகை காரில், நேற்று முன்தினம் பல்லாவரத்திற்கு வந்தார்.
பல்லவா கார்டன் பகுதியில் காரை நிறுத்தி வீட்டிற்கு சென்ற நிலையில், காரில் தீ பிடித்தது. தீயணைப்பு துறையினர் வந்து, தீயை அணைத்தனர். தீயில், காரின் முன்பகுதி எரிந்து நாசமானது. காரின் பேட்டரி சூடாகி தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
போன்களை திருடிய கும்பல் கைது
பூக்கடை: தண்டையார்பேட்டையில், இரு நாட்களுக்கு முன் நடந்து சென்ற ஜார்க்கண்டை சேர்ந்த பிரேந்தரகுமார், 39, என்பவரை தாக்கி, 300 ரூபாய் பறித்த ஐந்து பேர், ஆட்டோ ஓட்டுநரான தனவேல், 52, கூலித்தொழிலாளியான கருப்பையா, 40, ஆகியோரின் மொபைல் போன்களையும் திருடினர்.
ஒரே இரவில் பணப்பறிப்பு, மொபைல் போன் திருட்டில் ஈடுபட்ட மூலக்கொத்தளத்தைச் சேர்ந்த மணிகண்டன், 20, புகழேந்தி, 20, மற்றும் 17 வயதுடைய மூன்று சிறுவர்களை, பூக்கடை போலீசார் கைது செய்தனர். இருவர் புழல் சிறையிலும், மூன்று சிறார்கள், கெல்லீஸ் அரசு கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனர்.
வங்கி பெண் ஊழியர் தற்கொலை
கொளத்துார்: விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சசிரேகா, 30, கொளத்துார், கம்பர் நகரில் உள்ள சகோதரி சித்ரா, 32, என்பவரது வீட்டில் தங்கி, அம்பத்துாரில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்தார்.
வேலை முடிந்து, நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்த சசிரேகா, கழிப்பறை ஜன்னலில் துப்பட்டாவால் துாக்கிட்டு தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
உறவினர்கள் கதவை உடைத்து, அவரை மீட்டு, பெரியார் நகர் மருத்துவமனையில் சேர்த்தபோது, சசிரேகா ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது. சசிரேகா இறப்பு குறித்து கொளத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
