UPDATED : ஜூலை 15, 2026 10:05 PM
ADDED : ஜூலை 15, 2026 08:31 PM
ஓட்டேரி: ஓட்டேரியை சேர்ந்த 21 வயது பெண், கடந்த 14ம் தேதி இரவு 9:00 மணியளவில், ஜமாலியா சாலையில் தன் நண்பர் புனிதன் என்பவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது இரு பைக்கில் வந்த வாலிபர்கள், அப்பெண்ணை கத்தியால் தாக்க முயன்றனர். சுதாரித்த புனிதன், அப்பெண்ணை காப்பாற்றினார். இது குறித்த புகாரை அடுத்து, ஓட்டேரி போலீசார் விசாரித்தனர். இதில், அப்பெண்ணை தாக்க முயன்றது முன்னாள் காதலன் இமானுவேல், 22 மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேர் என்பது தெரிய வந்தது. போலீசார் அனைவரையும் கைது செய்தனர்.
டீ காசு கொடுப்பதில் தகராறில் மண்டை உடைப்பு
புதுவண்ணாரப்பேட்டை: ராயபுரத்தைச் சேர்ந்தவர் இமானுவேல் பிரபுகுமார், 40; இரவில் சைக்கிளில் டீ வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் டீ குடித்த புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 'சீரியல் செட்' குமார், 47; கொத்தனார் குமார், 39 ஆகிய இருவருக்கும் இடையே, பணம் கொடுப்பது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, வாக்குவாதம் முற்றிய நிலையில், கொத்தனார் குமார் அருகிலிருந்த கல்லால் 'சீரியல் செட்' குமாரின் தலையில் தாக்கினார். பலத்த காயமடைந்த அவரை, அங்கிருந்தோர் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரித்த போலீசார், கொத்தனார் குமாரை கைது செய்தனர்.
***
மனைவி கண்முன் கணவரை தாக்கி போதை வாலிபர்கள்
ஓட்டேரி: ஓட்டேரி நார்த் டவுன் பகதியைச் சேர்ந்தவர் ஆசிப் ரகுமான், 45. இவர், பெரியமேடில் கடை நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை 2:00 மணியளவில், மனைவியுடன் காரில் பட்டாளம் ஆஞ்சநேயர் கோவில் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் போதையில் வந்த இருவர் ஆசிப் ரகுமானின் காரில் இடித்துவிட்டு, வீண் தகராறில் ஈடுபட்டுள்ளனர். மனைவியின் கண்முன் ஆசிப் ரகுமானை சரமாரியாக தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த அவர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து விசாரித்த புளியந்தோப்பு போலீசார், புளியந்தோப்பு சாஸ்திரி நகரைச் சேர்ந்த இப்ராஹிம், 26, விஜய், 24 ஆகிய இருவரை கைது செய்தனர்.
'பொக்லைன்' மீது கார் மோதி விபத்து
நெமிலிச்சேரி: வேலுார் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய் கணேஷ், 36; தனியார் வங்கி மேலாளர். இவர், நேற்று காலை 'ஹூண்டாய் வென்யூ' காரில் ஆவடி நோக்கி சென்று கொண்டிருந்தார். நெமிலிச்சேரி அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னால் சென்ற 'பொக்லைன்' வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. விபத்து குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.
தனியார் பள்ளி 3 வாகனங்கள் பறிமுதல்
குன்றத்துார்: குன்றத்துார் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லையில் இயங்கும் தனியார் பள்ளிகளுக்கு, மாணவர்களை ஏற்றி செல்லும் வாகனங்களை, குன்றத்துார் வட்டர போக்குவரத்து அலுவலர்கள் நேற்று சோதனை செய்தனர். இதில் மூன்று வேன்கள் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பதிவு செய்யாமலும், உரிய ஆவணங்களின்றியும் மாணவர்களை ஏற்றி சென்றது தெரியவந்தது. இதை அடுத்து மூன்று வேன்களையும் பறிமுதல் செய்து, தலா 36,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
