UPDATED : ஜூலை 18, 2026 07:34 PM
ADDED : ஜூலை 18, 2026 07:13 PM
வானகரம்: அரும்பாக்கத்தைச் சேர்ந்த காந்தியப்பன், 62, வானகரம் அணுகு சாலையில் லாரியை நிறுத்தி, டீ குடிக்க கடைக்கு சென்றார்.
அப்போது மது போதையில் அங்கு வந்த முதியவர், லாரியின் பின் சக்கரம் அருகே படுத்துள்ளார். இதையறியாத காந்தியப்பன், லாரியை திரும்ப இயக்கியபோது டயர் ஏறியதில் முதியவரின் முகம் சிதைந்து இறந்தார். இதனால், அவரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
செயின் பறிப்பில் ஈடுபட்ட பெண் கைது
ராமாபுரம்: ராமாபுரத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி பணிபுரியும் சிவரஞ்சனி, 22, கழுத்தில் அணிந்திருந்த 6 கிராம் செயின், 2025, அக்., 7ல், விடுதியில் புகுந்து பறிக்கப்பட்டது. இதில் ஈடுபட்ட சின்ன போரூரைச் சேர்ந்த தனசேகர், 30, என்பவரை, ஏற்கனவே போலீசார் கைது செய்தனர்.
தலைமறைவாக இருந்த அவரது தோழியான தி.நகரைச் சேர்ந்த ராதிகா, 28, என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். அதே விடுதியில் தங்கி வேலை செய்த ராதிகா, 'ஒயர் கட்டர்' உபகரணத்தால் சிவரஞ்சனி செயினை துண்டிக்க முயன்றார். முடியாததால், தனசேகரை வரவழைத்து செயின் பறித்துள்ளார்.
**
ரூ.50 லட்சம் குட்கா அழிப்பு
சென்னை: சென்னையில் ஒரு வாரத்தில் 102 வழக்குகள் பதிவு செய்த போலீசார், குட்கா விற்றதாக 105 பேரை கைது செய்தனர்; 435 கிலோ குட்கா புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இவை உட்பட மொத்தம் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 5 டன் குட்கா புகையிலைப் பொருட்களை, உணவுப் பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறையினர் கொடுங்கையூர் குப்பை கிடங்கில் கொட்டி, நேற்று அழித்தனர்.
**
சிறுவனை வெட்டி திருட முயன்றவர் கைது
துரைப்பாக்கம்: ஓ.எம்.ஆர்., மேட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயன். இவரது 15 வயது மகன், நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது ஒரு நபர், சிறுவனிடம் கத்தியை காட்டி மிரட்டி, வீட்டில் இருந்த பொருட்களை திருட முயற்சி செய்துள்ளார்.
சிறுவன் சத்தம் போடவே, ஆத்திரமடைந்த அந்நபர், அவனது தாடை, கழுத்து, கையில் கத்தியால் குத்தி தப்பினார். சிறுவனுக்கு தனியார் மருத்துவமனையில் மூன்று தையல் போடப்பட்டது. துரைப்பாக்கம் போலீசார் விசாரித்து, கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திக், 26, என்பவரை, நேற்று கைது செய்தனர்.
**
போதை பொருட்கள் கடத்திய மூவர் கைது
தண்டையார்பேட்டை, சிவாஜி நகர் பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்து வந்த, அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன், 22, கேசவன், 19; திருவொற்றியூரை சேர்ந்த கார்த்திக், 25 உள்ளிட்ட மூவரை, ஆர்.கே.நகர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 60 போதை மாத்திரைகள், 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டது.
**
