UPDATED : ஆக 03, 2026 10:31 PM
ADDED : ஆக 03, 2026 09:02 PM
டி.பி.,சத்திரம்: ஷெனாய் நகரைச் சேர்ந்த பரத், 28, தன் மொபைல் போனில் பல பெண்களை, அவர்களுக்கு தெரியாமலே தவறாக வீடியோ எடுத்து, ஆபாச குரலி பேசி, சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்துள்ளார். இதில் ஒரு வீடியோவில், அதே பகுதியைச் சேர்ந்த 33 வயது பெண் இருப்பதை அவரது கணவர் பார்த்துள்ளார். சந்தேகத்தின் அடிப்படையில் பரத்திடம், இதுகுறித்து கேட்டபோது தகராறு ஏற்பட்டுள்ளது.
டி.பி.சத்திரம் போலீசார் விசாரணையில், பல பெண்களை தவறான நோக்கில், பரத் வீடியோ எடுத்தது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரது மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.
பெண்ணை சீண்டிய எலக்ட்ரீஷியன் கைது
அமைந்தகரை: அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த 29 வயது பெண், தனியார் நிறுவனத்தின் துாய்மை பணியாளர். கடந்த 30ம் தேதி, தன் குழந்தையுடன் வீட்டின் வெளியே நின்றிருந்த பெண்ணிடம், தினேஷ்குமார், 35, என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தப்பினார். அமைந்தகரை போலீசார் விசாரித்து, தனியார் நிறுவனத்தின் எலக்ட்ரீஷியனான தினேஷ்குமாரை, நேற்று கைது செய்தனர்.
வழக்கறிஞரின் போன்கள் திருடியவர் கைது
நீலாங்கரை: பாலவாக்கம், பல்கலை நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் டேனியல், 25, வீட்டில், கடந்த 30ம் தேதி புகுந்த மர்ம நபர், ஐபோன், சாம்சங் ஆகிய மொபைல் போன்களை திருடிச்சென்றார். நீலாங்கரை போலீசார் விசாரித்து, அதே பகுதியை சேர்ந்த ராஜு, 20, என்பவரை கைது செய்து போன்களை பறிமுதல் செய்தனர்.
250 கிலோ குட்கா பறிமுதல்
கோயம்பேடு: கோயம்பேடு காய்கறி சந்தையில், கறிவேப்பிலை மூட்டையில் மறைத்து, தடை செய்யப்பட்ட குட்கா எனும் போதை பொருட்களை விற்ற செங்குன்றத்சை் சேர்ந்த ராஜேஷ்குமார், 43, என்பவரை, கோயம்பேடு போலீசார் நேற்று கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 5 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரது நடத்திய விசாரணைக்கு பின் வடபெரும்பாக்கத்தைச் சேர்ந்த ரமேஷ், 32, என்பவரை கைது செய்தனர். அவரது வீட்டில் 250 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதலாகின.
மது பதுக்கிய ஆட்டோ ஓட்டுநர் கைது
புளியந்தோப்பு: பேசின்பாலம் காவல் நிலைய எல்லையில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பதாக கிடைத்த தகவலின் பேரில், தனிப்படை போலீசார் புளியந்தோப்பு மோதிலால் தெருவில் உள்ள வீட்டில் நேற்று சோதனை நடத்தினர். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 35 மதுபாட்டில்கள் மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக ஆட்டோ ஓட்டுநர் தன்ராஜ், 35, கைது செய்யப்பட்டார்.
போதை வாலிபர்கள் இருவர் கைது
ஓட்டேரி: ஓட்டேரி, குளக்கரை சாலையைச் சேர்ந்தவர் நெல்சன், 30; பெயின்டர். தன் அக்கா மேரி எலிசபெத் வீட்டின் பைக் நிறுத்தியிருந்தார். அப்போது, போதையில் வந்த மூவர் பைக் மீது அமர்ந்துள்ளனர். தட்டிக்கேட்ட மேரியை ஆபாசமாக பேசி, நெல்சனையும் தாக்கினர். புகாரின்படி ஓட்டேரி போலீசார், சந்திர யோகி சமாதி தெரு கலையரசன், 30, மங்களபுரத்தைச் சேர்ந்தகவுதம், 35, ஆகிய இருவரைம் நேற்று கைது செய்தனர்.
