ADDED : ஆக 06, 2026 03:20 AM
வழிப்பறி ரவுடி கைது
புளியந்தோப்பு: பு ளியந்தோப்பு, கே.பி.பார்க் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார், 27, கடந்த 23ம் தேதி, பேசின்பாலம் துளசிநாயக்கன் தெருவில் நின்று கொண்டிருந்தார். அவரிடம் மொபைல் போன், ஏ.டி.எம்., கார்டு உள்ளிட்டவற்றை பறித்து சென்ற அதே பகுதியைச் சேர்ந்த விஜய், 23, என்ற ரவுடியை, போலீசார் கைது செய்தனர்.
பெண்ணை சீண்டிய டெலிவரி ஊழியர் கைது
சூளைமேடு: மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த 28 வயது பெண், சூளைமேடில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலை வீட்டில் துாங்கி கொண்டிருந்த பெண்ணிடம், பாலியல் சீண்டலில் ஈடுபட்டு மர்ம நபர் தப்பினார்.
சூளைமேடு போலீசார் வழக்கு பதிந்து, உணவு டெலிவரி வேலை செய்யும் சைதாப்பேட்டையைச் சேர்ந்த நேதாஜி, 33, என்பவரை நேற்று கைது செய்தனர்.
ஸ்கூட்டர் திருடிய ரவுடி உட்பட மூவர் கைது
வண்ணாரப்பேட்டை: பழைய வண்ணாரப்பேட்டை, ராமதாஸ் நகரைச் சேர்ந்தவர் சிராஜுதீன், 26. கடந்த 30ம் தேதி, இவரது 'சுசூகி பர்க்மேன்ʼ ஸ்கூட்டர் திருடு போனது. வழக்கு பதிந்த வண்ணாரப்பேட்டை போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார், 19, விஷால், 19, மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ரவுடியான ஆபிரகாம் என்ற அபி, 23, ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்து, ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர்.
தாய் புகார்: ரவுடி மகன் கைது
பெரம்பூர்: பெ ரம்பூர், பாக்சன் தெருவைச் சேர்ந்தவர் அப்பு என்ற அமர்நாத், 29. இவர் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தினமும் மது அருந்தி வந்து, குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்களை துன்புறுத்தி வந்துள்ளார். இதையடுத்து, அப்புவின் தாய் ராக்வேல், 48, செம்பியம் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார், அமர்நாத்தை கைது செய்தனர்.
