ADDED : ஆக 17, 2026 09:03 PM
ரூ.1.50 லட்சம் கஞ்சா பறிமுதல்
கொரட்டூர்: கொரட்டூர் பேருந்து நிலையம் அருகே, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன், 24, தனபால், 29 மற்றும் விஷால், 29, ஆகியோர் நேற்று கஞ்சா விற்பனையில் ஈடுபட்டனர். அவர்களை, அம்பத்துார் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்து, 1.50 லட்சம் ரூபாய் மதிப்புடைய, 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.
நண்பனை தாக்கிய போதை கும்பல் கைது
வடக்கு கடற்கரை: பாரிமுனை, அரண்மனைக்காரன் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக், 39. கஞ்சா வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 9:30 மணிக்கு, மண்ணடி பகுதியில் நண்பர்களான, கதிர், 35, கார்த்திக் முருகன், 24, விக்னேஷ், 34, கவியரசு, 35 ஆகியோருடன் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, நீங்கள் தான் என்னை போலீசில் காட்டிக்கொடுத்தீர்கள் என தகராறில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரமடைந்த மற்ற நான்கு பேரும் சேர்ந்து கார்த்திக்கை சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்தவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விசாரித்த வடக்கு கடற்கரை போலீசார் கதிர் உட்பட நான்கு பேரையும் நேற்று கைது செய்தனர்.
போதையில் மயங்கிய முதியவரிடம் ‘ஆட்டை’
புளியந்தோப்பு: நீலாங்கரையைச் சேர்ந்தவர் நாகராஜ், 61. இவர், நேற்று முன்தினம் மாலை புளியந்தோப்பில் உள்ள நண்பர் ரவியை பார்த்து விட்டு நீலாங்கரை செல்ல, கன்னிகாபுரம் விளையாட்டு மைதானம் அருகே பேருந்திற்கு நின்றிருந்தார். அப்போது அதீத மது போதையில் இருந்துள்ளார். போதை மயக்கத்தில் இருந்தவர், நேற்று காலை எழுந்து பார்த்தபோது அவரது மொபைல்போன், நகை திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து புளியந்தோப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.
