UPDATED : ஆக 18, 2026 05:52 PM
ADDED : ஆக 18, 2026 05:52 PM
கொளத்துார்: செங்குன்றத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண், வேலை முடிந்து நேற்று முன்தினம் மாலை கோயம்பேடில் இருந்து செங்குன்றம் செல்லும் தடம் எண்: 114 பேருந்தில் பயணித்த போது, திருவொற்றியூரைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன், 38, சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். சுதாரித்த அப்பெண், சக பயணியர் உதவியுடன், அந்நபரை ராஜமங்கலம் போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீசார் அவரை கைது செய்தனர்.
போன் திருடிய வாலிபர் சிக்கினார்
ராயபுரம்: அயனாவரம், பி.இ., கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன், 41; ரயில்வே கேட் கீப்பர். கடந்த 16ம் தேதி வண்ணாரப்பேட்டை - கொருக்குப்பேட்டை இடையே இரவு பணியில் ஈடுபட்ட போது, அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது மொபைல் போன் திருடு போனது. இதுதொடர்பாக, ராயபுரம் போலீசார், மண்ணடியைச் சேர்ந்த இளங்கோ, 19, என்பவரை நேற்று கைது செய்தனர்.
தகராறை விலக்க சென்றவர் மீது தாக்குதல்
திருவல்லிக்கேணி: பல்லவன் சாலை, காந்தி நகரைச் சேர்ந்தவர் வினோத்குமார், 35; பெயின்டர். கடந்த 15ம் தேதி வீட்டருகே நடந்து சென்றார். அப்போது, ஒருவருடன் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட தமிழ்மணியை விலக்கிவிட்டுள்ளார். ஆத்திரமடைந்த தமிழ்மணி, தன் சகோதரர்களான ராகுல் கிருஷ்ணன், கோகுல கிருஷ்ணன் ஆகியோருடன் சேர்ந்து வினோத்குமாரை தாக்கினார். படுகாயமடைந்தவர், ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின்படி, திருவல்லிக்கேணி போலீசார், ராகுல் கிருஷ்ணன், 21, கோகுலகிருஷ்ணன், 19 ஆகியோரை கைது செய்து, தமிழ்மணியை தேடி வருகின்றனர்.
***
விபத்து ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுநர் கைது
எழும்பூர்: நந்தம்பாக்கம் காவல் நிலைய தலைமை காவலர் மகாவீர், 47, ஆயுதப்படை காவலர் சுந்தரமகாலிங்கம், 31, ஆகியோர், 'ஹோண்டா ஆக்டிவா மற்றும் ஹீரோ ஸ்பிளண்டர்' டூ - வீலர்களில், எழும்பூர், பாந்தியன் சாலை வழியாக நேற்று முன்தினம் மாலை சென்றனர். அப்போது, மதுபோதையில் ஆட்டோ ஓட்டி வந்த ஆயிரம்விளக்கைச் சேர்ந்த நாகராஜ், 37, என்பவர், டூ - வீலர்கள் மீது மோதினார். அதிர்ஷ்டவசமாக இருவரும் சிறுகாயத்துடன் தப்பினர். திருவல்லிக்கேணி போக்குவரத்து போலீசார், நாகராஜை நேற்று கைது செய்தனர்.
'லவ் டார்ச்சர்' கொடுத்தவருக்கு 'காப்பு'
கோயம்பேடு: கோயம்பேடு பகுதியில் 18 வயது கல்லுாரி மாணவியை காதலிக்க வற்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ ஓட்டுநர் பாலாஜி, 24, என்பவரை, கோயம்பேடு போலீசார் கைது செய்தனர்.
