UPDATED : ஆக 18, 2026 11:04 PM
ADDED : ஆக 18, 2026 09:02 PM
திருவொற்றியூர், காலடிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் தனுஷ்குமார், 17. கடந்த 14ம் தேதி, பள்ளி முன் நின்றிருந்தவரை, 30 பேர் கும்பல் சரமாரியாக தாக்கியது. இதில், சம்பவ இடத்திலேயே தனுஷ்குமார் உயிரிழந்தார். விசாரித்த திருவொற்றியூர் போலீசார், சண்முகபுரத்தைச் சேர்ந்த தியாகராஜன், 18 மற்றும் 11 சிறுவர்கள் உட்பட 12 பேரை, மறுநாளே கைது செய்தனர். இந்த நிலையில், ஆந்திரா மற்றும் கும்மிடிப்பூண்டியில் பதுங்கியிருந்த நான்கு சிறுவர்களை, நேற்று மாலை கைது செய்தனர். இதுவரை 16 பேர் கைதாகியுள்ளனர்.
கல்லுாரி மாணவி தற்கொலை
அரும்பாக்கம்: அரும்பாக்கம், ராணி அண்ணா நகரைச் சேர்ந்தவர் பரமேஸ்வரி, 20; தனியார் கல்லுாரி மாணவி. நேற்று முன்தினம் கல்லுாரி முடிந்து வீட்டிற்கு வந்தவர், துாக்கிட்டு தற்கொலை செய்தார். இது குறித்து அரும்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
***
மனைவியுடன் தகராறு: கணவர் தற்கொலை
அம்பத்துார்: அம்பத்துார், கள்ளிக்குப்பம், மேற்கு பாலாஜி நகரைச் சேர்ந்தவர் கில்பர்ட் ராஜ், 40; ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி அனிதா, 36. இரண்டு மகன்கள் உள்ளனர். தம்பதி இடையே, அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், விரக்தியடைந்த கில்பர்ட் ராஜ் நேற்று முன்தினம் துாக்கிட்டு தற்கொலை செய்தார். புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
***
700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கொருக்குப்பேட்டை: கொருக்குப்பேட்டை, திருவொற்றியூர், விம்கோ நகர், நந்தியம்பாக்கம் மற்றும் மீஞ்சூர் ரயில் நிலையங்களில் நேற்று, கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆந்திராவிற்கு ரயில் வழியாக கடத்துவதற்காக, நடைமேடையில் பயணியர் இருக்கைகளின் கீழ் 30 மூட்டைகளில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு, பட்டரவாக்கம் குடிமை பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
***
பெயின்டரிடம் பணம் பறித்த ரவுடி கைது
அயனாவரம்: அயனாவரம், திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் பாபு, 46; பெயின்டர். நேற்று காலை வீட்டருகே நடந்து சென்றபோது, மர்மநபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி, 500 ரூபாயை பறித்துச் சென்றார். அயனாவரம் போலீசாரின் விசாரணையில், வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த ரவுடி சஞ்சீவ்குமார், 31, என்பவர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. நேற்று அவரை போலீசார் கைது செய்தனர்.
