UPDATED : ஆக 19, 2026 07:56 PM
ADDED : ஆக 19, 2026 07:55 PM
கோயம்பேடு: கோயம்பேடு பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் பணிபுரிபவர், ரமேஷ், 31. கடந்த 17ம் தேதி மாலை வேலை முடித்து, நெசப்பாக்கம் சந்திப்பு அருகே நடந்து சென்றார். அப்போது மர்ம நபர் ஒருவர், அவரது 2,000 ரூபாயை பறித்து தப்பிச் சென்றார். இது குறித்து விசாரித்த கோயம்பேடு பேருந்து நிலைய போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட கோயம்பேடு நடைபாதையில் வசிக்கும் நாகேந்திர ராவ், 35 என்பவரை, நேற்று கைது செய்தனர்.
தேடப்பட்ட குற்றவாளி சிக்கினார்
மதுரவாயல்: மதுரவாயலில் 2021ம் ஆண்டு கண்ணன், 30 என்பவரை வெட்டி கொலை செய்ய முயன்ற கலைச்செல்வன், 29, என்பவர் கைது செய்யப்பட்டார். ஜாமினில் வெளியே வந்த கலைச்செல்வன், பூந்தமல்லி உதவி அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாமல், தலைமறைவாக இருந்து வந்தார். கடந்த 20ம் தேதி நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்ததை அடுத்து, அரக்கோணம் பகுதியில் பதுங்கியிருந்த கலைச்செல்வனை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
வாலிபரை தாக்கி பைக், போன் பறித்தோர் கைது
மடிப்பாக்கம்: பொழிச்சலுாரைச் சேர்ந்தவர் பிரபு, 36; தனியார் நிறுவன காவலாளி. இவர், நேற்று முன்தினம் காலை, கீழ்கட்டளை பெரிய தெரு, சிவன் கோவில் அருகில் சென்றபோது, அங்கு வந்த இருவர் 'ஹெல்மெட்'டால் தாக்கி, பைக், மொபைல் போனை பறித்து தப்பினர். இது குறித்து மடிப்பாக்கம் போலீசார் விசாரித்து, தென்காசியைச் சேர்ந்த இசக்கிமுத்து, 28, கடலுாரைச் சேர்ந்த அருண்பிரகாஷ், 28, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
