UPDATED : ஆக 22, 2026 08:54 PM
ADDED : ஆக 22, 2026 08:42 PM
கொளத்துார்: வில்லிவாக்கம், பாபா நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 52; முகப்பேரில் உள்ள எச்.டி.எப்.சி., வங்கி காவலாளி.
தன் ஸ்கூட்டரில், வீட்டிலிருந்து கிளம்பி கொளத்துார் அருகே தாதாங்குப்பம் பகுதியில், நேற்று காலை 8:00 மணிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வலிப்பு ஏற்பட்டதால் வாகனத்துடன் விழுந்தார். காயம் எதுவுமின்றி வலிப்பு அதிகமாகி இறந்தார். ராஜமங்கலம் போலீசார், வெங்கடேசன் உடலை மீட்டனர்; வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
அம்மன் நகை திருடிய பூசாரி கைது
ஆலந்துார்: ஆலந்துார், பொன்னியம்மன் கோவில் தெருவில் பொன்னியம்மன் கோவில் உள்ளது. கருவறையில் இருந்த 190 கிராம் வெள்ளி கிரீடம், 270 கிராம் வெள்ளி ஜல்லடை, 10 கிராம் தங்க தாலி திருடுபோனதாக, அரும்பாக்கத்தைச் சேர்ந்த பூசாரி ரங்கநாதன், 76, அறங்காவலர் தாமோதரன், 38, என்பவரிடம் தெரிவித்தார்.
அவரது புகாரையடுத்து, பரங்கிமலை போலீசார் விசாரணையில், பூசாரியே அம்மன் நகை, வெள்ளி பொருட்களை திருடி, கடையில் அடகு வைத்தது தெரிந்தது. போலீசார் ரங்கநாதனை கைது செய்து, நகை, வெள்ளி பொருட்களை மீட்டனர்.
பெண்ணிடம் 3 சவரன் செயின் பறிப்பு
குன்றத்துார்: வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சேகர், 63; நெசவாளர். தன் மனைவி தனலட்சுமி, 60, உடன் ஸ்கூட்டரில் அனகாபுத்துாரில் உள்ள மகன் வீட்டுக்கு நேற்று சென்றார். ஸ்ரீபெரும்புதுார் - குன்றத்துார் நெடுஞ்சாலை, சோமங்கலம் அருகே மழை வந்ததால், சாலையோரம் வாகனத்தை நிறுத்தினர். அப்போது, பைக்கில் வந்த மர்ம நபர் தனலட்சுமி அணிந்திருந்த 3 சவரன் தாலிச் செயினை பறித்துச் சென்றார். சோமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
10,000 போதை மாத்திரைகள் பறிமுதல்
புளியந்தோப்பு: வெளி மாநிலங்களில் இருந்து புளியந்தோப்பு பகுதிக்கு, பட்டாளம் பகுதியைச் சேர்ந்த சஞ்சய், 19, போதை மாத்திரைகளை கடத்தி வருவதாக, புளியந்தோப்பு தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம், ரேணிகுண்டா ரயில் நிலையத்தை போலீசார் அவரை பிடிக்க முயன்றனர். அவர் தப்பவே, அங்கிருந்த 10,000 போதை மாத்திரை கைப்பற்றினர். இந்நிலையில் செங்குன்றம் அருகே பம்மதுகுளம் பகுதியில் பதுங்கியிருந்த சஞ்சயை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
பெண்ணை தாக்கிய மூவர் கைது
வேளச்சேரி: ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த பிரதீபா, நேற்று முன்தினம், தன் பிறந்த நாளை சிறப்பிக்க, கணவர் மற்றும் தங்கையுடன் பெசன்ட் நகர் கடற்கரைக்கு சென்று, வீடு திரும்பி கொண்டிருந்தார். வேளச்சேரி மேம்பாலத்தில் காரை நிறுத்திய பிரதீபா, குடும்பத்தினருடன் மொபைல் போனில் புகைப்படம் எடுத்தார்.
அப்போது, மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த ஆறு பேர், அவர்களிடம் வீண் வம்பு செய்துள்ளனர்; மூவரையும் அடித்துள்ளனர்.
வேளச்சேரி போலீசார் விசாரித்து, வேளச்சேரி, காமராஜர்புரத்தைச் சேர்ந்த தீபக் ராஜா, 19, விக்னேஷ், 19, மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.
கொலை முயற்சியில் ஈடுபட்டவர் கைது
திரு.வி.க.நகர்: திரு.வி.க.நகர் சுப்ரமணி கார்டன் பகுதியில் வசிக்கும் 40 வயது பெண்ணுடன், சேட்டு, 37, என்பவர் தொடர்பில் இருந்துள்ளார். இந்நிலையில் அப்பெண், சேட்டிடம் பேசுவதை தவிர்த்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர், பெண்ணின் வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்று பிரச்னை செய்தார். அப்போது, பெண்ணின் மகளது காதலன் மோனிஷ், 24, என்பவருக்கும், சேட்டுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் சேட்டு, கத்தியால் மோனிஷை வெட்டி தப்ப முயன்றபோது, அப்பகுதியினர் அவரை பிடித்தனர். மோனிஷுக்கு தலை மற்றும் கைகளில் 12 தையல் போடப்பட்டது. போலீசார் நேற்று, சேட்டுவை கைது செய்தனர்.
மனைவியை தாக்கிய கணவர் கைது
அரும்பாக்கம்: அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ., காலனியைச் சேர்ந்தவர் வள்ளி தெய்வானை, 39. இவரது முதல் கணவர், 2021ல் உயிரிழந்த நிலையில், 2025ல் தேவராஜ், 45, என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், கடந்த மாதம் தேவராஜ் வேறு ஒரு பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்து, அவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக வள்ளி தெய்வானையிடம் கூறியுள்ளார். மேலும், வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியதால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த தேவராஜ், வள்ளி தெய்வானையை தகாத வார்த்தையால் திட்டி தாக்கிவிட்டு தப்பினார். இதுகுறித்து அரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தேவராஜை நேற்று கைது செய்தனர்.
பெண்ணை அவதுாறாக பேசியவர் கைது
பெரம்பூர்: பெரம்பூர் பழனியாண்டவர் கோவில் தெருவைச் சேர்ந்த 18 வயது பெண், வீட்டின் மாடியில் வசிக்கும் சுசீலாவுடன் கும்மிடிப்பூண்டியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வரவேற்பு பணிக்குச் சென்று, நள்ளிரவு 1:30 மணிக்கு வீடு திரும்பினார். சுசீலாவும் அங்கே தங்கினார். அதிகாலை 3:00 மணிக்கு வந்த சுசீலாவின் இரண்டாவது கணவரான வியாசர்பாடியை சேர்ந்த ஆனந்த்ராஜ், 30, தகராறில் ஈடுபட்டுள்ளார். தடுக்கச் சென்ற பெண்ணை அவதுாறாகப் பேசி தாக்க முயன்றுள்ளார். புகாரில், செம்பியம் போலீசார் ஆனந்த்ராஜை கைது செய்தனர்.
ரவுடிகள் ஐவர் கைது
பெரம்பூர்: பெரம்பூர், தீட்டி தோட்டம் முதல் தெருவைச் சேர்ந்த முகேஷ் என்ற அப்பு, 19; ரமணா நகர் பகுதியைச் சேர்ந்த சொம்பு என்ற பிரகாஷ், 21, சுண்டு என்ற சஞ்சய், 22; புளியந்தோப்பு பாட்ஷா என்ற தனுஷ், 21, மற்றும் ராஜ்பாய், 19, ஆகியோர், அவரவர பகுதிகளில் மக்களை மிரட்டி பணம் பறித்து வந்தனர். தவிர, போதை பொருட்களும் விற்று வந்தனர். போலீசார், ரவுடிகளான இந்த ஐந்து பேரையும், நேற்று கைது செய்தனர்.
தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் கைது
எம்.ஜி.ஆர்., நகர்;பெண்களிடம் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெசப்பாக்கம், பெரியார் நகரைச் சேர்ந்தவர் பாப்பா, 58. மளிகைக்கடை நடத்தி வருகிறார்.
கடந்த மாதம் 2ம் தேதி இவர் கடையில் தனியாக இருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர், குளிர்பானம் கேட்டுள்ளார்.
அந்த நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் பாப்பாவின் கழுத்தில் இருந்த, 8 சவரன் தாலிச்செயினை பறித்து தப்பிச் சென்றார். பாப்பா அளித்த புகாரின்படி எம்.ஜி.ஆர்., நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், செயின் பறிப்பில் ஈடுபட்டது எம்.ஜி.ஆர் நகர், நெடுஞ்செழியன் தெருவைச் சேர்ந்த சத்தியநாராயணன், 33 என்பதும், ஆன்லைன் டெலிவரி ஊழியர் என்பதும் தெரிந்தது. போலீசார் அவரை நேற்று கைது செய்தனர். அவர் வைத்திருந்த இருசக்கர வாகனம் தாம்பரம் பகுதியில் திருடப்பட்டதும் தெரிந்தது.
எம்.ஜி.ஆர்., நகர் மட்டுமின்றி, தி.நகர், வளசரவாக்கம் ஆகிய பகுதிகளிலும் பெண்களிடம் தாலிச்செயினை பறித்துள்ளார்.
அதை விற்று, புதிய தங்க செயின் வாங்கி தன் தோழிக்கு பரிசாகக் கொடுத்துள்ளார்.
சத்தியநாராயணனிடம் இருந்து, 18 சவரன் நகைகள் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் மீட்டனர்.
மாநகராட்சி அலுவலகத்தில் 'ஏசி' மின் சாதனம் மாயம்
வியாசர்பாடி:வியாசர்பாடி சந்தை பகுதியில், தண்டையார்பேட்டை மண்டல 46வது மாநகராட்சி வார்டு அலுவலகம் உள்ளது. இங்கு, அர்ச்சனா என்பவர் உதவி பொறியாளராக உள்ளார்.
இந்த வளாகத்தில் 'அம்மா' உணவகம், உதவி பொறியாளர், சுகாதார ஆய்வாளர், வரி வசூலிப்பு மற்றும் வார்டு கவுன்சிலர் அலுவலகங்கள் உள்ளன.
இதில், வார்டு கவுன்சிலர் அலுவலகத்தில் 'ஏசி' வேலை செய்யவில்லை என, இம்மாதம் 3ம் தேதி புகார் தரப்பட்டது. 'ஏசி' பழுதுபார்ப்பவர், கடந்த 18ம் தேதி, மொட்டை மாடியில் சென்று பார்த்தபோது, 'ஏசி'யின் வெளிப்புற சாதனம் திருடுபோனது தெரிந்தது.
அர்ச்சனா புகாரையடுத்து, வியாசர்பாடி போலீசார், 'ஏசி'யின் மின் சாதனத்தை திருடியவர்களை தேடி வருகின்றனர்.
