UPDATED : ஆக 23, 2026 08:47 PM
ADDED : ஆக 23, 2026 08:12 PM
ராயபுரம்: ராயபுரத்தைச் சேர்ந்த 24 வயது பெண், கடந்த 18ம் தேதி வீட்டில் இருந்தபோது, அவருக்கு அறிமுகமான தீபக் என்ற ராக்கி, 28, அப்பெண்ணை அவதுாறாக பேசி, வீடு புகுந்து தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்துச் சென்றார். புகாரில், ராயபுரம் போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ராயபுரம் ஜி.எம்.பேட்டையைச் சேர்ந்த ராக்கியை கைது செய்தனர்.
மனைவி பிரிந்ததால் கணவர் தற்கொலை
ராஜமங்கலம்: வியாசர்பாடி, சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் லியோ அரவிந்த், 32; தனியார் வங்கி கார் ஓட்டுநர். இவரது மனைவி ஷாலினி, 26. தம்பதிக்கு, 6 வயதில் மகள் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக, ஷாலினி அவரது தாய் வீட்டிலும், லியோ அரவிந்த் கொளத்துாரில் உள்ள விடுதியிலும் வாழ்ந்து வருகின்றனர். இதனால் மன உளைச்சலில் இருந்த லியோ அரவிந்த், தன் அறையில் நேற்று முன்தினம் இரவு துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ராஜமங்கலம் போலீசார், லியோ அரவிந்தின் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
ஆடையை கழற்றிய பெண்ணால் பரபரப்பு
எம்.கே.பி., நகர்: வியாசர்பாடி பகுதியில் நேற்று முன்தினம் சாலையோரம் நடந்து சென்ற இளம்பெண் ஒருவர், திடீரென தன் ஆடைகளை கழற்றி எறிந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பெண்கள், தங்களிடம் இருந்த உடையை பெண்ணிற்கு அணிவித்து, சிங்கப்பெண் சிறப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். போலீசாரின் விசாரணையில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும், 18 வயதான அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிந்தது. இதையடுத்து எம்.கே.பி., நகர் மகளிர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். தகவலறிந்து வந்த பெண்ணின் உறவினர்களுக்கு, போலீசார் அறிவுரை கூறி அப்பெண்ணை அனுப்பி வைத்தனர்.
