ADDED : ஆக 31, 2026 09:26 AM
சிறுமியை சீண்டிய வாலிபர் கைது
ஆவடி: ஆவடி காவல் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியிடம், ஆவடி அடுத்த கொசவன்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராம்குமார், 27, என்பவர், பாலியல் சீண்டல் செய்துள்ளார்.
இதுகுறித்து விசாரித்த பட்டாபிராம் மகளிர் போலீசார், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் 'போக்சோ'வில் நேற்று, ராம்குமாரை கைது செய்தனர்.
27 கிலோ கஞ்சாவுடன் 4 பேர் கைது
திரு.வி.க., நகர்: புளியந்தோப்பு மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைதானவர் அளித்த தகவலின்படி, ரேணிகுண்டா ரயில் நிலையம் சென்ற போலீசார், திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த பர்மதி பேகம், 34, ஷாஹீன் மெக், 20, ஷெரிப் உதின், 19, மற்றும் கஞ்சா விற்ற பெண் தரகர் ஆகிய நால்வரை நேற்று கைது செய்து, 27 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதேபோல், கண்ணகி நகர் பேருந்து நிலையம் அருகே மற்றும் செம்மஞ்சேரி பகுதியில் கஞ்சா விற்ற அற்புதராஜ், 32, ஜெயகுமார், 23, ஆகியோர் கைதாகினர்; 4 கிலோ கஞ்சா பறிமுதலானது.
வரதட்சணை கொடுமை: ஆசிரியை தற்கொலை
கோவிலம்பாக்கம்: செங்கல்பட்டு மாவட்டம், ஈச்சங்கரணியைச் சேர்ந்த ஜானகிராமனுக்கும், எஸ்.கொளத்துாரைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை புவனேஸ்வரிக்கும், 2024 செப்டம்பரில் திருமணம் நடந்தது. 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது. திருமணத்தின்போது வரதட்சணையாக 70 சவரன் நகை, கார் வழங்கப்பட்டது.
கூடுதல் வரதட்சணை கேட்டு புவனேஸ்வரியை, கணவர் வீட்டினர் துன்புறுத்தி வந்தனர். மன உளைச்சலில் இருந்த புவனேஸ்வரி, தாய் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பள்ளிக்கரணை போலீசாரும், கிண்டி வருவாய் கோட்டாட்சியரும் தனித்தனியே விசாரிக்கின்றனர்.
பஸ் நடத்துநரை தாக்கியவர் கைது
ராஜமங்கலம்: செங்குன்றம் நிலையத்தில் இருந்து அயனாவரம் நோக்கி நேற்று முன்தினம் சென்ற தடம் எண் '114 ஏ' பேருந்தில், மாதவரம் நிறுத்தத்தில் மது போதையில் ஒருவர் ஏறினார். கோயம்பேடுக்கு டிக்கெட் தரும்படி கேட்டார். இந்த பேருந்து கோயம்பேடு செல்லாது என நடத்துநர் சுரேஷ்குமார், 53, கூறியதால் வீண் தகராறு ஏற்பட்டது. அப்போது சுரேஷ்குமாரை, போதை நபர் தாக்கினார்.
விசாரித்த ராஜமங்கலம் போலீசார், நடத்துநரை தாக்கிய பெஞ்சமின் பீட்டர், 42, என்பவரை நேற்று கைது செய்தனர்.
இருதரப்பு மோதல்: வாலிபர் சீரியஸ்
திருவொற்றியூர் : சாத்தாங்காடு, சார்லஸ் நகரைச் சேர்ந்தவர் சுனில், 22. இவரது காதலியை சிலர் கிண்டல் செய்துள்ளனர். இதையறிந்த சுனில் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது, அவரை அந்த கும்பல் தாக்கியது. தடுக்க முயன்ற அவரது அண்ணன் முனீஸ்வரன், 35, என்பவரை அந்த கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது.
இதில் முனீஸ்வரன் நிலைகுலைந்தார். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். விசாரித்த சாத்தாங்காடு போலீசார், தாழங்குப்பத்தைச் சேர்ந்த லோகேஸ்வரன், 21, ஜான்சன், 19, ஜெயநாதன், 19, 17 வயதுடைய சிறுவன், என, நான்கு பேரை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.
